சென்னை: சிக்கிம் மாநிலம் பாக்யோங்கில் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் மத்தியப் பிரதேசம், மணிப்பூர், ஹரியானா மற்றும் தமிழகம் என வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்தவர் சுபேதார் கே.தங்கப்பாண்டியன் (வயது 41) உயிரிழந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
அதாவது, கடந்த 5ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் பின்னாகுரியிலிருந்து பாக்யோங் நோக்கு நேற்று ராணுவ வீரர்களின் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. ரெனாக் - ரோங்லி என்ற சாலை பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்த போது, சாலையை விட்டு வாகனம் விலகிச் சென்று அருகே இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளாது.
அந்த விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கப்பாண்டியன், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப் படேல், இம்பாலைச் சேர்ந்த பீட்டர், ஹரியானாவைச் சேர்ந்த நாயக் குர்சேவ் சிங் ஆகிய 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தமிழக ராணுவ வீரர் பலி: வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கே.தங்கப்பாண்டியன்(41). தற்போது இவர் சுபேதாராக பணியாற்றி வந்த இவருக்கு வளர்மதி என்ற பெண்ணுடன் திருமணமாகி, 6 மற்றும் 8 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த தங்கப்பாண்டியன் 20 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கார் விபத்தி சிக்கி உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் இவரும் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து உயிரிழந்த தங்கபாண்டியன் உடலை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைவில் சொந்த ஊரான கான்சாபுரம் கிராமத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த தங்கபாண்டியன் உடல் நேற்று மாலை 7.30 மணியளவில் அவர் சொந்த ஊரான கான்சாபுரம் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்பு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தங்கபாண்டியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த இறுதிச் சடங்கில் சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன், தாசில்தார் சரஸ்வதி, ஸ்ரீவில்லிபுத்தூர் டிஸ்பி ராஜா, ராணுவ அதிகாரி ரோகித் கோர் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க தங்கப்பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: மணிப்பூரில் மீண்டும் மோதல்.. ராக்கெட் குண்டுகள் தாக்குதலில் 5 பேர் பலி!