தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் குழு சார்பில், ஆண்டுதோறும் மேட்டூர் அணையை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை பாசனம், பயிர் சாகுபடியும், நீர் வழங்கல் திட்டமும் பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் குழு தலைவர் கலைவாணன் கூறுகையில், “நடப்பு ஆண்டு குறுவை சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கிடைக்க சாத்தியக்கூறு இல்லை. ஆகவே, ஒருபோக சாகுபடிக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதியில் மேட்டூர் அணையை திறக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாதந்தோறும் தண்ணீர் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்க வேண்டும். பாசன நீர் திறனை உயர்த்த வேண்டும், ஆறுகள், வாய்க்கால்கள் தூர் வாருவதை போல் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை தூர்வார வேண்டும். இதற்காக, விவசாய பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி போதாது. ஆகஸ்ட் 15க்குப் பிறகு மேட்டூர் அணையைத் திறந்தால் ஒரு போக சாகுபடியை சிக்கனமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடியும்" என்று கூறினார்.
இந்நிலையில், இம்மாதம் 21ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம், எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ளது. அதில், ஜூன் மாதம் முதலான பாசன ஆண்டில் திறக்க வேண்டிய தண்ணீரின் அளவு மற்றும் மழைப்பொழிவு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் ஜில் அப்டேட்!