சென்னை: தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை, 4 லட்சத்து 26 ஆயிரத்து 821 மாணவிகளும், 3 லட்சத்து 84 ஆயிரத்து 351 மாணவர்களும் என மொத்தமாக 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 மாணவ, மாணவியர் எழுதினர்.
இந்த நிலையில், நடந்து முடிந்த 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளது. இந்த தேர்வில், 4 லட்சத்து 4 ஆயிரத்து 143 மாணவிகளும், 3 லட்சத்து 35 ஆயிரத்து 396 மாணவர்களும் என மொத்தமாக 7 லட்சத்து 11 ஆயிரத்து 172 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விழுக்காடு அடிப்படையில், மாணவிகள் 94.69 சதவீதமும், மாணவர்கள் 87.26 சதவீதமும் பெற்றும் மாணவர்களைவிட 7.43 சதவீதம் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், மொத்தமாக 91.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விழுக்காடு அடிப்படையில், மாணவிகள் 94.69 சதவீதமும், மாணவர்கள் 87.26 சதவீதமும் பெற்றும் மாணவர்களைவிட 7.43 சதவீதம் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், மொத்தமாக 91.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் மொத்த தேர்ச்சி விழுக்காடு என்பது கடந்த ஆண்டைவிட 0.24 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், 7534 மேல்நிலைப் பள்ளிகளின் மாணவர்கள் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில், 1964 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதேபோல, 241 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம் பின்வருமாறு:-
வ.எண் | பள்ளிகள் | தேர்ச்சி சதவிகிதம் |
1. | அரசுப் பள்ளிகள் | 85.75% |
2. | அரசு உதவி பெறும் பள்ளிகள் | 92.36% |
3. | தனியார் சுயநிதிப் பள்ளிகள் | 98.09% |
4. | இருபாலர் பள்ளிகள் | 91.61% |
5. | பெண்கள் பள்ளிகள் | 94.46% |
6. | ஆண்கள் பள்ளிகள் | 81.37% |
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கோயம்புத்தூர் மாவட்டம் 96.02 சதவீதம் பெற்று முதலிடத்தையும், ஈரோடு மாவட்டம் 95.56 சதவீதம் பெற்று 2ஆம் இடத்தையும், திருப்பூர் மாவட்டம் 95.23 சதவீதம் பெற்று 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகள் அளவில் ஈரோடு முதலிடத்தையும், அரியலூர் 2ஆம் இடத்தையும், திருப்பூர் 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளன. தமிழகத்தில் வேலூர் மாவட்டம் 81.40 சதவீதத்துடன் கடைசி இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு; ஒரே நாளில் 4000 பேர் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பம்!