சென்னை: நாளை மறுநாள் (ஏப்.19) நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளின் ஒரு பகுதியாக தேர்தல் மையங்களான பள்ளிகளில் வாக்கு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தேர்தல் மையங்களில் பலத்த பாதுகாப்பு பணிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) மேல்நிலை பொதுத் தேர்வுக்கான மதிப்பீட்டு பணி நடைபெறாது என்றும், வழக்கம் போல், ஏப்ரல் 22ஆம் தேதி அன்று மதிப்பீட்டுப் பணி நடைபெறும் என்பதை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு கேட்டுக் கொள்ளப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று (ஏப்.17) 10 மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு விடுமுறை என புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும், 12 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தி முடித்தவர்களுக்கு விடுமுறையும் , திருத்தி முடிக்காமல் இருக்கும் சில பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி இன்று காலை மட்டும் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தென் மாவட்டங்களுக்குத் தேர்தல் கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!