தூத்துக்குடி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தமாக வேட்பாளர் எஸ்.டி.ஆர் விஜயசீலனை ஆதரித்து இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் திருச்செந்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்திற்கு முன்னதாக, ஜி.கே. வாசன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியா பாதுகாப்பாக இருக்க இந்தியா பொருளாதாரத்தில் வளமையாக இருக்க மூன்றாவது முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் வெற்றி பெற முருகப்பெருமானைத் தரிசனம் செய்தேன்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, தமாக போட்டியிடும் 3 இடங்களிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தெரிவித்த அவர், கச்சத்தீவு பிரச்சனையை பாஜக கொண்டு வருவது அரசியல் என்றால் முதலமைச்சர் இது தொடர்பாக நீதிமன்றம் செல்வது வாக்கு வங்கிக்காகவா என கேள்வி எழுப்பினார். மேலும், கச்சத்தீவைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் வரலாற்றுப் பிழை செய்துள்ளது. அதற்கு திமுக அரசு உடந்தையாக உள்ளது.
அதன் தாக்கம் இந்த தேர்தலில் மீனவர்கள் மத்தியில் தெரியும் எனவும் திமுக மீனவர்களிடம் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறது. திமுக நீலிக்கண்ணீர் வடித்து மீனவர்களை ஏமாற்றுகிறது. ஏமாறுவதற்கு மீனவர்கள் ஏமாளிகள் இல்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து, கச்சத்தீவைத் தாரை வாத்து கொடுக்கும் போது நீங்கள் மத்திய அமைச்சராக இருந்தீர்கள் என எழுப்பிய கேள்விக்கு, கச்சத்தீவு தாரை வாத்து கொடுத்தது இந்திரா காந்தி காலம் எனவும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக அர்த்தம்” என தெரிவித்தார்.
பின்னர், மேலும் பேசிய அவர், ஒவ்வொரு தேர்தலிலும் திமுக ஆள் பலம், அதிகார பலம், பண பலத்தை வைத்து வென்று கொண்டிருக்கிறது. பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என விமர்சித்தார்.