திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகரைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (30). இவர் மன்னார்குடி வடசேரி சாலையில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவர் இன்று காலை கடையைத் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததால், வீட்டிற்கு சென்று சாப்பிடாமல் மன்னார்குடி பெரிய கடை வீதியில் உள்ள பிரபலமான உயர்தர சைவ உணவகத்தில் பொடி தோசை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
பின் கடைக்கு ஆர்டர் மூலம் வந்து சேர்ந்த பொடி தோசையை சாப்பிட்டு உள்ளார். இந்நிலையில், பொடி தோசையுடன் கார சட்னி இருந்துள்ளது. அதை சாப்பிட்டுக் கொண்டே சட்டினியை தொட்டு பார்த்துள்ளார். அப்போது அதில் முசுக்கட்டை பூச்சி செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் சிறிது நேரத்தில் பிரவீன் குமாருக்கு குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, கடையில் இருந்த தனது நண்பரிடம் உடல்நிலை சரியில்லை என பிரவீன் குமார் தெரிவித்த நிலையில், அவரது நண்பர்கள் உடனடியாக பிரவீன் குமாரை மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் உறவினர்களும், நண்பர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனின் அசாத்திய ஆசிய சாதனை!