திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், இந்த விழாவின் சிகர நிகழ்வான மகா கார்த்திகை தீபத்திருவிழா நாளை மறுநாள் (டிச.13) கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
அதன் அடிப்படையில், இந்த ஆண்டிற்கான மகா கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள் (டிச.13) அதிகாலை 4 மணியளவில் கோயில் மூலவர் சன்னிதியில் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இதற்கிடையில், இந்த கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்து எல்லாவிதத்திலும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், மகா தீபத்திற்காக பயன்படுத்தப்படும் தீபக்கொப்பரைக்கு திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊழியர்கள் மூலம் நாளை (டிச.12) மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
அதேபோல் மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1500 மீட்டர் நீளம் உடைய காடாத்துணியை இன்று (டிச.11) அண்ணாமலையார் திருக்கோயிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு வைர கிரீடம் வழங்கிய இஸ்லாமிய பக்தர்!
அதனைத் தொடர்ந்து, நாளை (டிச.12) மகா தீபத்திற்காக பயன்படுத்தப்படும் 1500 மீட்டர் காடாத்துணியும், மகா தீபத்திற்காக பயன்படுத்தப்படும் தீபக்கொப்பரையும் 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"மலை ஏற அனுமதி இல்லை": இதற்கிடையில், திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோர் மட்டும் மலையில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.
போக்குவரத்து மாற்றம்: அதேபோல, திருவண்ணாமலை மகா தீபத்திருநாளையொட்டி திருவண்ணாமலை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை (டிச.12) முதல் 15ஆம் தேதி வரை பெங்களூரு, கிருஷ்ணகிரி, சித்தூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து விழுப்புரம், கடலூர், புதுச்சேரி நோக்கிச் செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் மற்றும் ஆற்காடு - திமிரி - ஆரணி - திருவண்ணாமலை மற்றும் ஆற்காடு - கண்ணமங்கலம் - திருவண்ணாமலை வழியாக செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இதற்கு மாறாக, அனைத்து வாகனங்களும் ஆற்காடு- செய்யாறு - வந்தவாசி - திண்டிவனம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இதுமட்டும் அல்லாது, தீபத் திருவிழாவிற்கு பக்தர்கள் செல்லும் இலகு ரக வாகனங்கள் மட்டும் வழக்கமாக செல்லும் வழித்தடத்திலேயே அனுமதிக்கப்படும் என்று ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.