சென்னை: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில், திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சசிகாந்த் செந்தில் (ஐஏஎஸ்) கை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதியில், கூட்டணிக் கட்சிகளின் சார்பில் பூவிருந்தவல்லி ஒன்றியம், நகரம் சார்பில் 2 பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.
அதில், முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மற்றும் திருவள்ளூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்று, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து, கூட்டணிக் கட்சி சார்பில் சசிகாந்த்-ஐ வெற்றி பெறச் செய்ய வேண்டுமென அனைத்து கட்சி கூட்டணி நிர்வாகிகளும் பிரச்சாரம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சசிகாந்த் செந்தில், "சமீப காலமாகவே இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் எதுவுமே தன்னிச்சையாக செயல்படவில்லை. அதனை எதிர்த்துதான் இந்தியா கூட்டணி. அதனால், பாஜக தோரணை எதிர்த்து தான் இந்த கூட்டணி. ஆகையால் இவற்றையெல்லாம் சிந்தித்து மக்கள் ஓட்டு போட வேண்டும்.
பாஜகவில் இணைபவர்கள் சாதாரணமாக இணையவில்லை. பல உருட்டல்கள், மிரட்டல்கள் தான் காரணம். தேர்தல் பரப்புரை செய்ய விடாமல் காங்கிரஸ் கணக்கை முடக்கி வைத்துள்ளனர். இது எப்படி ஜனநாயகத் தேர்தலாக இருக்க முடியும்? கடந்த முறை பெற்ற வாக்குகளை விட, இந்த முறை மூன்றரை லட்சத்திற்கு மேல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.