சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் இன்று நடைபெற்ற லயோலா மாணவர் பேரவை தொடக்க விழாவில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், திருவள்ளூர் எம்பியுமான சசிகாந்த் செந்தில் கலந்து கொண்டார். இதில் லயோலா கல்லூரியின் முதல்வர் லூயிஸ் ஆரோக்கியராஜ் மற்றும் லயோலா கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் உரையாடிய சசிகாந்த் செந்தில், "நான் எனது யுபிஎஸ்சி தேர்வில் நான்வாது முறையாக தான் வெற்றி பெற்றேன். கடுமையான காலங்களைக் கடந்து தான் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். நான் பள்ளி, கல்லூரிகளில் கடைசி டேபிள் மாணவன். ஒரு கட்டத்தில் எனது பெற்றோரே என் மீது நம்பிக்கையை இழுந்தனர். இன்றயை காலத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் உங்கள் கனவை நோக்கி நகருங்கள்.
அனைவரும் அரசியலில் பங்கேற்க வேண்டும். எப்போதும் பணத்தைக் கொண்டு சமுதாயத்தை மாற்ற முடியாது. மிக கடினமான சூழல் மிகுந்த நிலையில் தான் இந்திய அரசியல் உள்ளது. எப்போதும் பாதிக்கப்பட்ட மக்கள் பின்பு நிற்பது தான் உண்மையான நியாயம். புதிய தொழில்நுட்பத்தால் எந்த பாதிப்பும் இல்லை. அம்பேத்கர் சட்ட புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும்" என்றார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சசிகாந்த் செந்தில், “பாஜகவில் ஊருக்கு இரண்டு ரவுடிகளைப் பிடித்து கட்சியில் சேர்ப்பது தான் வேலை. ஆருத்ரா விவகாரத்திற்கும், பாஜக நிர்வாகிகளுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை ஆராய வேண்டும். இந்த பிரச்னை எழுப்பியதற்காக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீது தனி மனித தாக்குதலை அண்ணாமலை நடத்தி வருகிறார்.
ஆரூத்ரா குறித்த பேச்சை மாற்றுவதற்காக தான் அவர் இவ்வாறு மடைமாற்றும் வகையில் செயல்படுகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணாமலை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன், வன்மையான கண்டிக்கிறேன். இப்படி பேசுவதன் மூலம் அண்ணாமலை கவரேஜ் கிடைக்கும் என பேசுகிறார். ஆனால், மக்களின் வெறுப்பை தான் அவர் பெற்றுக் கொள்கிறார். அவரது கட்சியின் பெரிய தலைவர்களான அமித்ஷாவின் லிஸ்ட் எல்லாம் எடுத்தால் அது வேற லெவலுக்கு போகும்.
மீண்டும் சொல்கிறேன், ஆருத்ரா விவகாரத்திற்கும், பாஜகவிற்கும் என்ன சம்பந்தம் என பதில் சொல்ல வேண்டும். திறமை இருந்தால் பதில் சொல்லட்டும். கைது செய்யும் வேலையை அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். அண்ணாமலையின் அரசியல் சித்தாந்தம் மோசமான சித்தாந்தம். மக்களை மக்களின் மீது திருப்பும் சித்தாந்தம், கோபத்தையும், வன்மத்தையும், வெறுப்பையும் விதைக்கும் சித்தாந்தம்.
இந்த சித்தாந்தத்தை எதிர்க்கிறோம். பாஜகவினர் தனி மனித தாக்குதலை மேற்கொள்கின்றனர். இது அரசியல் நாகரிகம் அல்ல. சிபிஐ இன்று எந்த நிலையில் இருக்கிறது என தெரியும். என்னுடைய தனிப்பட்ட கருத்து, சிபிஐயில் எனக்கு நம்பிக்கை அல்ல. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் யார் என்ன செய்தார்கள் என்பது தான் முக்கியம். பாஜக இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோருவதே சந்தேகத்தை எழுப்புகிறது. எனக்கு அரசின் மீது நம்பிக்கை உள்ளது. குற்றவாளிகளை கைது செய்வார்கள்” என தெரிவித்துள்ளார்.