திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னக் கவுண்டன் வலசு என்ற கிராமத்தில் சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் திருவருட்செல்வன் (17). இவரது பெற்றோர் புகழேந்திரன் மற்றும் மாலதி ஆகியோர் கரோனா பொது முடக்கக் காலகட்டத்தில் கரோனா தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஆதரவற்ற திருவருட்செல்வன் தனது மூத்த சகோதரி லாவண்யா உடன் அவரது தாய் மாமாவான வேல்முருகன் பாதுகாப்பில் வளர்ந்து வருகின்றார். திருப்பூர் பனியன் கம்பெனியில் டெய்லராக பணிந்து புரிந்து வரும் வேல்முருகன் தனது சொற்ப சம்பளத்தை வைத்து திருவருட்செல்வன் மற்றும் அவரது மூத்த சகோதரி லாவண்யா ஆகியோரை படிக்க வைத்து வளர்த்து வருகிறார்.
லாவண்யா தற்போது காங்கயத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் முதலாமாண்டு படித்து வருகிறார். கெட்டிச்செவியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த திருவருட்செல்வன், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 479 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழில் 80 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 41 மதிப்பெண்களும், புள்ளியியலில் 90 மதிப்பெண்களும், பொருளியலில் 86 மதிப்பெண்களும், வணிகவியலில் 94 மதிப்பெண்களும், கணக்குப்பதிவியலில் 88 மதிப்பெண்களும் என மொத்தம் 479 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பெற்றோரை இழந்து தாய் மாமன் அரவணைப்பில் அரசுப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற திருவருட்செல்வன், பைலட் ஆவதே தனது கனவு என கூறுகிறார். மேலும், மேல்படிப்பு படிக்கும் சூழ்நிலையில் தனது குடும்பம் இல்லாத போது, பைலட் ஆகும் தனது கனவைத் தன்னார்வலர்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திருவருட்செல்வன் பேசுகையில், “என்னைப் படிக்க வைத்தது என்னுடைய மாமா. எனக்கு பைலட் ஆகனும்னு ஆசை. குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் பைலட்டிற்கு படிக்க வைக்க முடியாது. ஆகவே தன்னார்வலர்கள் நான் படிப்பதற்கு உதவிபுரிய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பில் தேர்ச்சி: கையோடு வேலை.. நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்த மாணவி! - Salem Student Got Job Offer To Hcl