மதுரை: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் குடும்பத்தில் உள்ள பெண்களின் புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்தி ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் சமூக வலைத்தளங்களான 'X' தளத்திலும் மற்றும் Telegram பக்கத்திலும் பதிவிட்டுள்ளதாக அளித்த புகாரின் கீழ் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக அந்த மர்ம நபரை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவலர்களைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த விசாரணையில், பெண்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களை திருடி அதில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் சமூக வலைத்தளங்களான 'X' தளத்திலும் மற்றும் Telegram பக்கத்திலும் பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக பதிவிட்ட நபர் திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த தனிப்படை காவல்துறையினர் திருப்பூருக்கு விரைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, குற்றச் செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் சூர்யாவை கைது செய்து, அவரிடம் இருந்த செல்போன், சிம்கார்டுகள் மற்றும் இன்டர்நெட்டுக்கு பயன்படுத்திய மோடம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இந்த புகாரின் அடிப்படையில் விரைவாக செயல்பட்ட சைபர் கிரைம் மற்றும் தனிப்படை காவல்துறையினருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். இதுமட்டுமல்லாது, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.55 லட்சம் மோசடி.. குஜராத் இளைஞர்கள் சிக்கியது எப்படி?