திருப்பத்தூர்: காவல்துறையின் தெரிவுநிலையை மேம்படுத்தவும், பெண்கள் மற்றும் பொது மக்களிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் விதமாகவும் இன்று (பிப். 5) திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட 19 இருசக்கர வாகனங்களை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு வழங்கி உள்ளது.
மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 24 மணி நேரமும் காவலர்கள் ரோந்து பணியை மேற்கொண்டு குற்றச் செயல்களில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் இவ்வாகனங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த ஜிபிஎஸ் வாயிலாக மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் 100 எண்ணுக்கு வரும் அவசர அழைப்புகளை காவலர்கள் பெற்று உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்கிறார்களா என்பதை கண்காணிக்க முடியும். இதன் மூலம் 100 அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் நேரத்தை முழுமையாக மேம்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு காவலர்களின் செயல்பாடுகள் ஜிபிஎஸ் கருவி மூலமாக மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்தும், சம்பந்தப்பட்ட முகாம் அலுவலகங்களில் இருந்தும் கண்காணிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார். ஏற்கனவே பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது பேருந்து நிலையப் பகுதிகளில் பெண்கள் பீட் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களின் கண்காணிப்பில் 3 பீட் அமைப்புகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு உள்ளன.
தற்போது ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகன கண்காணிப்பு மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை அதிகரிப்பது, அதிக புறக்காவல் நிலையங்களை துவக்குவது உள்ளிட்டவையும் திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் 100 அவசர அழைப்புக்கு பதில் அளிப்பதில் மாநில அளவில் திருப்பத்தூர் மாவட்டம் சிறந்த இடத்தை பெற்றுள்ளது. வெறும் 7.40 நிமிடங்களில் பதில் அளிப்பு நேரத்தை அம்மாவட்டம் கொண்டுள்ளது. மேலும் 92.6 சதவிகித அழைப்பாளர்கள் காவல்துறையின் பதிலளிப்பு சிறப்பாக உள்ளதகவும் மதிப்பிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், துணை காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'கண்டா வரச் சொல்லுங்க' வைரலாகும் போஸ்டர் யாரை வரவேற்க..தெரியுமா?