திருப்பத்தூர்: வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை குக்கிராமத்தில் கோபால்ரெட்டி - பத்மாவதி தம்பதிக்கு நான்காவது மகனாக 1965ஆம் ஆண்டு ஜனவரி 7 இல் கே.ஜி. ரமேஷ் பிறந்தார்.
இவர் பள்ளி படிப்பை காக்கங்கரை அரசு தொடக்கப் பள்ளியிலும், நத்தம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியும் படித்தார். பின்னர் இவருக்கு திருமணமாகி ப்ரதீபா என்கிற மனைவியும், சிவ்நாராயன் என்கிற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் காக்கங்கரை ஊராட்சியில் கவுன்சிலராக போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து கந்தலி ஒன்றிய குழுத்தலைவராக அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கந்திலி ஒன்றிய செயலாளராக பதவி வழங்கினார்.
பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட இவர் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினரானார்.
பின்னர் சிறப்பாக கட்சி பணி ஆற்றி வந்த அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கந்திலி ஒன்றியம் அதிமுக கழகத்தால் கட்சியின் நலன் கருதி இரண்டாக பிரித்து கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி வழங்கினார்.
இந்த நிலையில் தொடர்ந்து கட்சி பணி ஆற்றி வந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 15) இரவு 9 மணிக்கு உயிரிழந்தார் என தனியார் மருத்துவமனை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான காக்கங்கரை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.'
இந்நிலையில், அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை அவரது சொந்த தோட்டத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கே.ஜி.ரமேஷ் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு 'செக்' வைத்த ஸ்டாலின்!