திருப்பத்தூர்: நீங்கள் சொன்னால் நான் கேட்க மாட்டேனா? நடவடிக்கை எடுக்க மாட்டேனா? ஏன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இங்கே அழைத்து வந்தீர்கள்? என்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பள்ளி சீருடையில் குழந்தைகளை மனு கொடுக்க அழைத்துவந்த பெற்றோரிடம் கண்டிப்புடன் அறிவுறுத்திய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் வருவாய் கோட்டாட்சியரிடம் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரி சமுத்திரம் தென்னந்தோப்பு வட்டம் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு முனீஸ்வரன் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த கோயில் நிர்வாகிகள் தென்னந்தோப்பு வட்டம் பகுதியில் உள்ள 20 குடும்பத்தைச் சேர்ந்த நபர்களை கோயில் வழியாக இருக்கும் பொது வழியில் அனுமதிக்காமல் நீங்கள் ஏற்கனவே எப்படி வரப்பு வழிகளை பயன்படுத்தினீர்களோ அதே வழியை பயன்படுத்திக் கொள்ளுங்கள் இந்த வழியில் வராதீர்கள் என்று தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'கிறிஸ்தவ சபைகளுக்கு அச்சுறுத்தல்'.. நீலகிரி ஆட்சியரிடம் கூட்டமைப்பு புகார் மனு!
இதன் காரணமாக சுமார் ஒரு வார காலமாக அந்த பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதியுற்று வந்ததால் இன்று (நவ.25) திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்தனர். அப்போது மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியரிடம் "இந்த பிரச்சனை குறித்து விசாரித்து தகவல் கூறுங்கள்" என்று உத்தரவிட்டுள்ளார்.
இதுமட்டும் அல்லாது, பள்ளி சீருடையிலேயே மனு கொடுக்க வந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து, "ஏன் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இங்கே அழைத்து வந்தீர்கள்? நீங்கள் சொன்னால் நான் கேட்க மாட்டேனா? நடவடிக்கை எடுக்க மாட்டேனா? முதலில் பள்ளி மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இது சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலரையும் பள்ளியின் தலைமை ஆசிரியரையும் வரச் சொல்லி உத்தரவிட்டார். இதனால் மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட அரங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்