திருநெல்வேலி: திருநெல்வேலி கொக்கிரகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர். கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு படித்து வருகின்றனர்.
சேதமடைந்த பள்ளி கட்டிடம்: இந்நிலையில் கடந்தாண்டு அந்த பள்ளியில் சேதமடைந்த கடிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது. அதன் காரணமாக மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்கு அருகில் ஒரு வாடகை கட்டிடத்தில் வைத்து பாடம் நடத்தப்பட்டது.
முடிந்த கட்டிட பணி தாமதமாக்கும் அதிகாரிகள்: ஆனால் வாடகை கட்டிடமும் மோசமான நிலையில் காட்சியளித்ததால் கட்டிட பணிகளை விரைந்து முடித்து, உடனே பள்ளியை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் அந்த புதிய கட்டிடப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து பெற்றோர்கள் புதிய கட்டிடத்தை திறக்க வலியுறுத்தியுள்ளனர்.
அப்போது பள்ளி நிர்வாகம் பள்ளி கல்விதுறை அமைச்சர் மற்றும் மேயர் தலைமையில்தான் புதிய கட்டிடம் திறக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு பெற்றோர்கள் மாணவர்களின் நலன் கருதி உடனே திறக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அதை பள்ளி நிர்வாகம் ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் நேற்று அதிரடியாக மாணவர்களை புதிய கட்டிடத்துக்கு அழைத்துச் சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையும் படிங்க: திரையரங்க போதைப்பொருள் விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப் பிழை.. தமிழக முதல்வருக்கு பறந்த கோவை பள்ளி மாணவியின் கடிதம்!
பிஸியான அதிகாரிகள் ரத்தான கட்டிட திறப்பு: இதையடுத்து இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் புதிய பள்ளி திறப்பு விழாவை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்தாக தெரிகிறது.இந்நிலையில் நேற்று திடீரென பொறுப்பு அமைச்சர்கள் மாற்றப்பட்டதால் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சென்னை சென்றார்.
எனவே அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அதேபோல் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணனும் நெல்லையின் புதிய பொறுப்பு அமைச்சரான கே.என் நேருவை சந்திக்க திருச்சி சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் திறப்பு விழா ரத்தான நிலையில் மீண்டும் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் இன்று பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திறந்து வைத்த மாவட்ட பள்ளி கல்வி அதிகாரிகள்: மேலும் அதிகாரிகள் முறைப்படி திறந்த பிறகு எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். அதுவரை அவர்கள் வீட்டில் இருக்கட்டும் என்று கூறி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட பள்ளி கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக பள்ளியை முறைப்படி திறந்து வைத்தனர். அதன் பிறகு மாணவர்கள் தங்களின் புதிய பள்ளி அறையில் அமர்ந்து பாடம் படிக்கத் தொடங்கினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்