திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்துக்கு உட்பட்ட பேட்டை பகுதிகளில் கடந்த சில தினங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகமடைந்துள்ளதாக பொதுமக்கள் தரப்பில் மாநகராட்சிக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்களது பெற்றோர்களுடன் இன்று மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், “சிறுவர்கள் நாங்கள் விளையாட தெருக்கள் இல்லை. இந்த தெரு நாய்க்கள் அவற்றை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அவற்றை பார்த்தால் கடித்து விடுமோ என பயமாக இருக்கிறது.
இதையும் படிங்க: சிறுவனின் கையை குதறிய தெரு நாய்: சென்னை மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!
இது குறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே கமிஷனர் அங்கிள் நாய் எங்களை கடிப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் சிறுவர்கள் தங்கள் கைகளில் "கமிஷனர் அங்கிள்! எங்களை நாய்கள் கடித்துக் குதறுவதற்கு முன் நடவடிக்கை எடுப்பீர்களா?, இதில் தெருக்கள் நாங்கள் விளையாடவா? அல்லது நாய்கள் விளையாடவா? போன்ற வாசகங்கள் பொறுந்திய பதாகையை கையில் ஏந்தி மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம் முன் புகார் மனுவுடன் நின்றனர்.
இதையடுத்து மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் அந்த சிறுவர்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இவ்வாறு சிறுவர்கள் ஒன்றிணைந்து பெற்றோர்களுடன் மாநகரட்சிக்கு புகார் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்