திருநெல்வேலி: தமிழகத்தில் வரும் புதன்கிழமையுடன் பிரச்சாரம் முடியவுள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையில் நேற்று (ஏப்.12) ராகுல் காந்தி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (ஏப்.15) நரேந்திர மோடி 2வது முறையாக நெல்லைக்கு வருகை தந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாஜக நூதன முறையில் மக்களை ஏமாற்றுவதாக நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா தலைமையில் திமுக நிர்வாகிகள் இன்று (ஏப்.13) நெல்லை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் கூறுகையில், "பாஜக நூதன முறையில் மக்களை ஏமாற்றி வருகிறது. அது குறித்து புகார் அளிப்பதற்காக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியைச் சந்தித்து வந்துள்ளோம். மோசடி தொடர்பான புகார் மனுவை தேர்தல் கட்டுப்பட்டு அறையில் கொடுத்துள்ளோம்.
பிஎல்ஓ அதிகாரி மூலம் பாஜக சார்பில் மக்களின் செல்போனுக்கு லிங்க் அனுப்பப்படுகிறது. அதில் தாமரை சின்னம் வருகிறது. அந்த லிங்கை அழுத்தினால் 500 ரூபாய் பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்த லிங்கை அழுத்தினால் மக்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கையாக இந்த புகார் மனுவை கொடுத்துள்ளோம்.
அதேபோல் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் அலுவலகம் அங்குள்ள ஓட்டலின் கார் பார்க்கிங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டலுக்கு வருபவர்கள் அவர்களது வாகனத்தை நிறுத்த முடியாமல் சிரமப்படுவதாகப் புகார் வருகிறது. எனவே பாஜக தேர்தல் அலுவலகத்தை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது சீல் வைக்க வேண்டுமென மக்கள் கூறுகிறார்கள். அது தொடர்பாகவும் புகார் மனு அளித்துள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நயினார் நாகேந்திரன் மீது நாங்கள் அடிக்கடி ஒன்றும் புகார் அளிக்கவில்லை. எது உண்மையோ அதைத் தான் புகாராகக் கொடுக்கிறோம். அவருடன் எங்களுக்குப் போட்டி இல்லை. அவர் தன்னை நேர்மையானவர் எனக் கூறுகிறார். எனவே நேர்மையானவர் என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக திமுக நிர்வாகிகள் மனு கொடுக்க சென்ற போது, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கார்த்திகேயன் அவர்களை மதிக்காமல் எழுந்து சென்றதாகவும், மனு வாங்க தனக்கு அதிகாரம் இல்லை எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பரவாயில்லை என திமுக நிர்வாகிகள் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மனுவை கொடுத்துள்ளோம் எனப் பேட்டியில் மைதீன் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ''அதிமுக, திமுகவை ஓட ஓட விரட்டி விட்டு பாஜகவுக்கு ஓட்டு போடுங்க" - குமரி வாகன பேரணியில் அமித்ஷா ஆவேச பேச்சு! - Lok Sabha Election 2024