திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் உயிரிழந்து பத்து நாட்களுக்கு மேலாகிறது. இருப்பினும், அவரது மரணம் குறித்து எந்த ஒரு முழுமையான தகவலும் இதுவரை வெளியாகவில்லை. போலீசார் 10 நாட்களாக தீவிர விசாரணை நடத்தியும், தற்போது வரை ஜெயக்குமார் மரணம் கொலையா, தற்கொலையா என்பது உறுதி செய்யப்படவில்லை.
ஐஜியின் பேட்டி: இந்த நிலையில், முதல் முறையாக நேற்று தென் மண்டல ஐஜி கண்ணன், ஜெயக்குமார் வழக்கு குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த மே 3ஆம் தேதி ஜெயக்குமாரைக் காணவில்லை என அவரது மகன் அளித்த புகார் பேரில் விசாரணையைத் தொடங்கினோம். தொடர்ந்து அவரது உடல் எரிந்த நிலையில் எடுக்கப்பட்டது. உடலில் பின்பகுதி எரியாமல் இருந்தது. அவரது உடலில் கை, கால்கள் இரும்புக் கம்பிகளால் லூசாக கட்டப்பட்டிருந்தன. வயிற்றில் கடப்பாக்கல்லும் கட்டப்பட்டிருந்தது.
வாயில் பாத்திரம் கழுவும் ஸ்கிரப்பும் இருந்தது. அதனடிப்படையில் விசாரணை நடத்தினோம். ஆனாலும், தற்கொலையா கொலையா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. முழுமையான விசாரணைக்குப் பிறகு இந்த விவரம் தெரிய வரும். உடற்கூறாய்வு சோதனை செய்ததில் இடைக்கால அறிக்கை மட்டுமே கிடைத்துள்ளது. முழுமையான அறிக்கை எதுவும் வரவில்லை.
முக்கியமான அறிக்கைகள்: அதேபோல் டிஎன்ஏ சோதனை, சைபர் க்ரைம் சோதனை, தடய அறிவியல் சோதனை, கைரேகை நிபுணர் குழு சோதனை என பலகட்ட சோதனைகளைச் செய்துள்ளோம். குடும்பத்தினர் மற்றும் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் இடம் பெற்ற 32 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடிதத்தில் சபாநாயகர் அப்பாவு பெயர் இடம் பெற்றிருப்பதால், தேவைப்பட்டால் அவரிடமும் விசாரணை நடத்துவோம்” என்று தெரிவித்தார்.
கடினமான வழக்கு: இதன் மூலம் இதுவரை ஜெயக்குமார் மரணத்தில் மறைந்திருக்கும் மர்மங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது தெரிய வருகிறது. குறிப்பாக, இதை கண்டுபிடிப்பதற்கு ஏன் தாமதம் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, சில வழக்குகளில் காவல்துறை விரைவாக கண்டுபிடித்து விடும், சில கடினமான வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது தாமதமாகும் என தெரிவித்தார்.
ராமஜெயம் வழக்கு: மேலும், ஏற்கனவே திருச்சியில் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் ராமஜெயம் கொலை வழக்குடன் ஜெயக்குமார் வழக்கு ஒத்துப்போவதாக ஒரு தகவல் பரவியது. ராமஜெயம் வாயில் துணி திணிக்கப்பட்டு, அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். அதேபோல, ஜெயக்குமார் வாயில் பார்த்திரம் கழுவும் ஸ்கிரப்பர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ராமஜெயம் மரணம் பார்த்தவுடன் திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்தது.
ஜெயக்குமார் வழக்கில் அதுபோன்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. எனவே, முழு விசாரணைக்குப் பிறகு உண்மை தெரியவரும் என கூறினார். மேலும், எந்த வழக்கிலும் இல்லாத வகையில், ஜெயக்குமார் வழக்கில் 10 தனிப்படைகள் டிஎஸ்பிக்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஐஜி தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் ஜெயக்குமார் வழக்கு தமிழக காவல்துறையில் சவாலான வழக்குகளின் பட்டியலில் செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, தனது பேட்டியில் கஷ்டமான வழக்கு என்பதை ஐஜி குறிப்பிட்டு இருந்தார். இதனால் ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்டு 11 நாட்களாகியும் அவரது மரணத்திற்கு பின்னால் உள்ள மர்மம் மர்மமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெற்ற மகனுக்கு ரூ.2000 கொடுக்கல, 1 கோடிக்கு வீடு''? சவுக்கு சங்கரின் மனைவி பகீர்.. பரபரக்கும் பதிவுகள்!