திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி 36வது வார்டு மாமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த சின்னத்தாய், தனது மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில், "தனது வார்டில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனியார் நபரிடம் பொதுமக்களுக்கு விநியோகம் வழங்கும் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது முதல் தொடர்ந்து நான் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறேன்.
மேலும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தனது சொந்தக் கட்சியினரிடையே சாதியப் பாகுபாடு தலைவிரித்து ஆடுகிறது. இவர்களுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்ய முடியவில்லை. அதுமட்டுமின்றி, தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போதும், சொந்தக் கட்சியினரால் அவமானப்பட்டதாக” கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ராஜினாமா கடிதத்தை ஆன்லைன் மூலமாக மேயர் சரவணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஆகியோருக்கு அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், திமுக முன்னாள் மாவட்டச் செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப், மாமன்ற உறுப்பினர் சின்னத்தாய் மற்றும் அவரது கணவர் கிருஷ்ணன் ஆகியோரை அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மேயர் சரவணனிடம் கேட்டபோது, மருத்துவக் காரணங்களுக்காக சென்னை வந்திருப்பதாகவும், தனக்கு இதுகுறித்த தகவல் எதுவும் தெரியவில்லை எனப் பதிலளித்தார். இதற்கிடையில், “ராஜினாமா செய்யப் போவதாக ஆணையரிடம் நேரில் கடிதம் கொடுக்கவில்லை. வாட்ஸ்அப் குழுவில் தான் பதிவிட்டோம். மேலும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், ராஜினாமா முடிவைக் கைவிட்டு விட்டதாக” கவுன்சிலர் சின்னத்தாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 7வது வார்டு கவுன்சிலர் ராஜினாமா கடிதத்தை ஆணையரிடம் வழங்கினார். ஆனால், கையெழுத்து இல்லாததால் அவர் அதை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா காவல் நீட்டிப்பு! - Delhi Excise Policy Case