தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு, பக்தர்கள் உண்டியலில் செலுத்துகின்ற காணிக்கைகளை மாதந்தோறும் எண்ணும் பணியானது நடைபெறுகிறது.
அந்தவகையில், கடந்த 43 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி கோயிலில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு, கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமை வகித்தார். இணை ஆணையர் கார்த்திக் முன்னிலை வைத்தார்.
தூத்துக்குடி உதவி ஆணையர் செல்வி, திருச்செந்தூர் அறநிலையத்துறை ஆய்வாளர் செந்தில் நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் மோகன், சுப்பிரமணியன், கருப்பன், சிவகாசி பதினெண்சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர், கோயில் பணியாளர்கள் ஆகியோர் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், நிரந்தர உண்டியல் மூலம் 4 கோடி 16 லட்சத்து 12 ஆயிரத்து 491 ரூபாயும், கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் 53 ஆயிரத்து 532 ரூபாயும், யானை பராமரிப்பு உண்டியல் மூலம் 98 ஆயிரத்து 196 ரூபாயும் , பங்குனி உத்திர திருவிழா தற்காலிக உண்டியல் மூலம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 21 ரூபாயும், மொத்தம் 4 கோடியே 19 லட்சத்து 34 ஆயிரத்து 240 ரூபாயும், தங்கம் 2300 கிராமும், வெள்ளி 46 ஆயிரம் கிராமமும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 781 கிடைத்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அரசியல் வருகையை உறுதி செய்தார்... நடிகர் விஷால்! 2026 தேர்தலில் போட்டி? - Actor Vishal