விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அண்ணன் குமரேசன் மற்றும் தம்பி மணிகண்டன் ஆகியவர்கள். இருவரும் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது அண்ணன் குமரேசனுக்கும், அவரது தம்பி மணிகண்டனுக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆத்திரம் அடைந்த தம்பி மணிகண்டன், அண்ணன் குமரேசனை அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து அவர் கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த குமரேசன் இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.
குமரேசன் இரத்த வெள்ளத்தில் இருந்த நிலையை பார்த்த மது அருந்திக்கொண்டிருந்த மூன்று நண்பர்களும் அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குமரேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்(டி.எஸ்.பி) சுரேஷ் பாண்டியன் மற்றும் ரோஷணை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற் கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த திண்டிவனம் ரோஷணை காவல் துறையினர், மது போதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை, தம்பியே பீர் பாட்டிலால் தாக்கியதில் அண்ணன் உயிரிழந்திருப்பது முதற் கட்ட விசாரணையில் வெளி வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:ராமர் பாண்டி கொலை வழக்கு; 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததது!