விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அறுங்குறிக்கை கிராமத்தில் கண்ணன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த பணியினை திருக்கோவிலூர் அருகே உள்ள பெருங்குருக்கை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம்(48), நரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(40) மற்றும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெய்வணை கிராமத்தைச் சேர்ந்த முருகன்(38) ஆகியோர் மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 8 மணியளவில் மீண்டும் கிணறு ஆழப்படுத்தும் பணியை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
![உயிரிழந்த தணிகாசலம், ஹரி கிருஷ்ணன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/30-07-2024/22081074_vpm.png)
அப்போது பொக்லைன் இயந்திரத்தில் ரோப் கயிற்றால் பெரிய இரும்புத் தொட்டியை கட்டி கிணற்றுக்குள் மூவரும் இறங்கியுள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக ரோப் அறுந்து 100 அடி ஆழமுள்ள அக்கிணற்றுக்குள் மூவரும் விழுந்துள்ளனர். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே கை, கால் உள்ளிட்ட பகுதிகள் முறிந்து உயிரிழந்துள்ளனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மூவரது உடலைக் கிணற்றிலிருந்து மேலே தூக்கி, உயிரிழப்பிற்குக் காரணமான பொக்லைன் இயந்திரத்தின் ஓட்டுநர், நிலத்தின் உரிமையாளர் மற்றும் இவர்களை இந்த பணிக்கு அழைத்து வந்த நபர் என மூன்று பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி கதறி அழுதுள்ளனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூவரது உடலை ஒரு மணி நேரப் பேச்சு வார்த்தைக்குப் பின்னர் மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்த மூவரின் உறவினர்களும், "கயிறு அறுந்து விழுந்ததில் இவர்கள் இறக்கவில்லை, கிணற்றை ஆழப்படுத்தச் சட்டத்திற்குப் புறம்பாக ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி உள்ளனர். அதில் வெடிப்பு ஏற்பட்டு அதன் மூலமாக இவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்" என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.
பின்னர், சம்பவ இடத்திற்கு விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் நேரில் சென்று இறந்தவர்களின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/30-07-2024/22081074_whatsapp.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: திருவான்மியூரில் கோயில் கோபுரத்திலிருந்து தவறி விழுந்த சிவனடியார் உயிரிழப்பு!