சென்னை: நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுவனின் உதவியுடன், மூன்று பள்ளி சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்த நபரை தனிப்படை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நபர் ஒருவர், கடந்த 30 ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மகள் உட்பட 7 முதல் 10 வயதுடைய மூன்று சிறுமிகளை அடையாளம் தெரியாத நபர் பாலியல் சீண்டல் செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கடந்த 30ஆம் தேதிக்கு முன்பு திருவான்மியூர் பகுதியில் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர் என்னுடன் வந்தால் சாக்லேட் தருகிறேன் என்று 7 முதல் 10 வயதுடைய மூன்று சிறுமிகளை அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுத்துவிட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவர்களிடம் இதைப் பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதனால், சிறுமிகள் வீட்டில் இது பற்றி, எதையும் கூறாமல் பயத்தோடு இருந்துள்ளனர். இதையடுத்து சிறுமி ஒருவர் வீட்டில் சோர்வாக இருந்ததால் பெற்றோர்கள் விசாரித்த போது, இந்த உண்மையை தெரிவித்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த சிறுமிகளிடம் விசாரணை நடத்தி அவர்களை அழைத்துச் சென்ற நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த சிறுவனுக்கும் அந்த நபரை பற்றி முழுமையான தகவல் எதுவும் தெரியவில்லை. பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் கூறிய அங்க அடையாளங்களை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.
இதற்கிடையே, அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து அவரைப் பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடிவருகின்றனர். இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை விழிப்புணர்வு: முன் பின் தெரியாத நபர்கள் உங்களது குழந்தைகளிடம் எப்படி பழகுகின்றனர். குழந்தைகள் எங்கு செல்கின்றனர் என்பது குறித்து பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அவர்களின் அன்றாட செயல்பாடுகளில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாக அவர்களிடம் மனம்விட்டு பேசுங்கள். உடலில் தவறான தொடுதல் தொடர்பான புரிதலை அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் பாலியல் தொந்தரவு அளித்தால் உடனடியாக 1098 என்ற (Childline Helpline) எண்ணுக்கு அழையுங்கள் என காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை..!