சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், ஏறத்தாழ 180க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கருணாபுரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனையிலும், மற்றவர்கள் சேலம், விழுப்புரம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 54 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். 148 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள சித்திற்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களான பிரவின் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக கள்ளச்சாராயம் அருந்தியதால், இரு நாட்களாக வயிற்று எரிச்சலால் பாதிக்கப்பட்டு அவதியுற்றுள்ளனர். அவ்வப்போது மெடிக்கலில் மாத்திரைகள் வாங்கி போட்டும் சரியாகவில்லை. மேலும், இவர்களின் உடல்நிலை மோசமானதால் முண்டியப்பாக்கம் பகுதியில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் கச்சிராபாளையம் காவல் நிலைய போலீசார் ராம், சின்னதுரை, ஜோசப் ராஜா ஆகிய 3 பேர் மீது கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்ததற்காகக் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 39 பேரின் உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெரம்பூர் இருசக்கர வாகன விபத்து: பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு! - PERAMBUR ACCIDENT CCTV FOOTAGE