தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறையில் இருந்த 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் (Cello Tape) ஒட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 11ஆம் தேதி மனு அளித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், ஒரத்தாடு வட்டார கல்வி அலுவலர் தமிழ்வாணன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மாணவர்கள், சக வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதில் மாணவர்கள் விளையாட்டாக வாயில் செல்லோ டேப் ஒட்டியதாகவும், அதனை பள்ளியிலிருந்த ஆசிரியை ஒருவர் செல்போனில் படம் எடுத்து, அதனை பெற்றோர்களுக்கு அனுப்பியது விசாரணையில் தெரிய வந்தது.
இதையும் படிங்க: "ஆசிரியர்களை விற்பனை செய்யும் பள்ளிக்கல்வித்துறை" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
அதையடுத்து பட்டுக்கோட்டை தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன், அய்யம்பட்டி அரசுப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் உள்பட 3 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். தற்போது இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கூறுகையில், "ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளியில் மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டிய விவகாரத்தில், கல்வித் துறை அதிகாரிகள் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவாகரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்களும் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்