கோயம்புத்தூர்: ஆலாந்துறை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலின் மூலவரான வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு வடிவத்தில் ஏழாவது மலையில் அமைந்துள்ளார்.
சுயம்பு வடிவிலான சிவனை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மலையேற்றம் செய்ய பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டிற்கான மலை ஏற்றம் துவங்கி உள்ளது. கடந்த மாதம் முதல் பக்தர்கள் ஏழு மலை ஏறி சிவனை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விடுமுறை தினமான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளியங்கிரி மலை ஏறி உள்ளனர். அவர்களுடன் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சார்ந்த சுப்பாராவ் என்ற முதியவரும் மலை ஏறியுள்ளார். அப்போது, நான்காவது மலை ஏறிக்கொண்டிருக்கும் போது அவருக்கு திடிரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 5 வது மலையில் இருந்த மருத்துவ குழுவினர் அங்கு வந்து அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே போல் சேலம் மாவட்டத்தை சார்ந்த தியாகராஜன் என்பவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு மலை ஏறும்போது 1 வது மலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து சுமை தூக்குபவர்கள் உதவியோடு இரண்டு பேரின் உடல்களும் மலையில் இருந்து கீழே கொண்டுவரப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை மலை ஏறிய தேனி மாவட்டத்தை சார்ந்த பாண்டியன் என்பவர் இரண்டாவது மலை ஏறும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது உடலும் சுமை தூக்குபவர்களின் உதவியோடு கீழே கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் மலையற்றம் செய்ய வேண்டாம் என நாள்தோறும் அறிவித்து வருகிறோம் ஆனால் அதனை பொருட்படுத்தாமல் ஒரு சிலர் மலையேற்றம் செய்வதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மலையிலேயே உயிரிழந்து விடுகின்றனர். நோய் தன்மை உடையவர்கள் மலையேற்றம் செய்ய வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம் என்றனர்.
முன்னதாக, கடந்த மாதம் இருவர் மலை ஏற்றத்தின் போது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்பிற்காக மலையில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்புகளில் கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து வனத்துறை ஈசா யோக மையத்துடன் இணைந்து இரண்டு இடங்களில் மருத்துவ முகாமை அமைத்துள்ளது.