திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி திருவள்ளூர் வடக்கு ராஜவீதி தெருவில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பாட்டிலில் அடைக்கப்பட்ட கொய்யாப்பழ ஜூஸ் வாங்கியுள்ளார்.
அந்த ஜூஸ் பாட்டீலின் எம்ஆர்பி விலை ரூ.125 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவரிடம் சூப்பர் மார்க்கெட் ரூ.143 வசூலித்துள்ளது. இதைப்பற்றி மார்க்கெட் மேலாளரிடம் கேட்டதற்கு முறையான பதில் அளிக்காததால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் எம்ஆர்பி விலையை விட கூடுதலாக வசூலித்த ரூ.18-ஐ திருப்பி அளித்திடக் கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதையும் படிங்க : "ரூ.115 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்" - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம்!
ஆனால் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதற்கும் எந்தவித பதிலும் அளிக்காமல் சூப்பர் மார்க்கெட் அலட்சியமாக இருந்து வந்துள்ளது. இதனால் மனஉளைச்சல் அடைந்த வுாடிக்கையாளர், எம்ஆர்பி விலையை விட கூடுதலாக வசூலித்ததற்கான தொகை விவரம் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து ரூ.3.5 லட்சம் இழப்பீடு கேட்டு தனியார் சூப்பர் மார்க்கெட் மீது திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் லதா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவில், 'எம்ஆர்பி விலையைவிட கூடுதலாக வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த ரூ.18-ஐ தனியார் சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் அவருக்கு திருப்பி அளிக்க வேண்டும். அவரை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு ரூ.10,000மும், வழக்கு செலவிற்கு ரூ.5,000 என மொத்தமாக ரூ.15,000 இழப்பீடு வழங்கிட வேண்டும்' என்று நீதிபதி தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்