சென்னை: இந்தியாவின் முன்னாள் மற்றும் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் 60-வது ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் மே 27ஆம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஜவஹர்லால் நேருவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதையை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஜவஹர்லால் நேருவின் திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "இந்தியாவில் இன்றைக்கு இருக்கின்ற அனைத்து வளர்ச்சிக்கும், அஸ்திவாரம் போட்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு. தன்னிகரற்ற பிரதமராக, இந்தியாவில் நிகரற்ற தலைவராக வாழ்ந்த ஜவஹர்லால் நேருவுடைய 60ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (மே 27) தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணைக்கட்டாக இருந்தாலும், காவிரி நதிநீர் பிரச்னையாக இருந்தாலும் சரி. மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். நடுநிலையோடு செயல்பட மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டும். நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், நடுவர் மன்றங்கள் என உச்ச நீதிமன்றம் வரை பல்வேறு கட்டங்கள் இருக்கின்றன.
மத்திய அரசு அனுமதி இல்லாமல், அணைகள் கட்ட தொடங்கப்படுமேயானால், அவற்றை உச்ச நீதிமன்றத்தின் வாயிலாகவோ அல்லது நடுவர் மன்றங்கள் வாயிலாகவோ அல்லது மத்திய அரசின் வாயிலாகவோ தடுத்த நிறுத்த மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்கிறது. ஆனால், இன்னும் விழிப்போடு இருந்து, விரைந்து செயல்பட வேண்டும்.
கூட்டணிக்கும், அணைக்கட்டுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது; முன்பு அங்கு பாஜக ஆட்சியில் இருந்தது. பாஜக இருந்தபோது என்ன செய்தார்கள்?. கேரளாவில் தற்போது கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருக்கிறது; முன்பு காங்கிரஸ் இருந்தது. எந்த ஆட்சியாக இருந்தாலும், அண்டை மாநிலங்களில் பிரச்சனைகள் இருக்கின்றன. இவை கட்சியும், கட்சியும் பேசி தீர்க்கக்கூடிய விஷயங்கள் அல்ல. சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டிய விஷயம்" என்று திருநாவுக்கரசர் கூறினார்.
தொடர்ந்து ஜெயலலிதா இந்துத்துவவாதி என, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய கருத்திற்கு பதிலளித்த திருநாவுக்கரசுர், "ஜெயலலிதா ஆன்மீகவாதி தான். ஆனால் மதவெறி பிடித்தவர் கிடையாது. எம்.ஜி.ஆர் அவர்களும் கடவுளை வழிபடுவார். சாமி கும்பிடுகிறவர்கள் எல்லாரையும் மதவாதிகள், மதவெறி கொண்டவர்கள் எனக் கூறி விட முடியாது" என்று அவர் தெரிவித்தார்.