திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களை காலி செய்து, அங்கு வசித்து வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை பாம்பே பர்மா டிரெடிங் கார்ப்ரேஷன் (பிபிடிசி) மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, தேயிலை தொட்ட தொழிலாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், வனத்துறை விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் சார்பில் 13 பக்க அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாஞ்சோலை மக்கள் வாழ்வுரிமை மீட்பு குழு சார்பில், மாஞ்சோலை தேயிலைத் தொட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நெல்லையில் இந்த விவகாரம் தொடர்பாக மாநாடு நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (திங்கட்கிழமை) மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் நெல்லை ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில், மாஞ்சோலையில் கடந்த 8 நாட்களாக தொழிலாளர்களுக்கான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளதை சரிசெய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருமுருகன் காந்தி கூறியதாவது, "கடந்த 8 நாட்களாக மாஞ்சோலை தொழிலாளர்கள் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். சமூக நீதி அரசு என்று சொல்லிக் கொள்ளும் தமிழக அரசு மாஞ்சோலை மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
தேயிலை நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரத்து 200 கோடி வரை சம்பாதித்துள்ளது. இதுதவிர அவர்களது மற்ற நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். எனவே அவர்கள் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீட்டை கொடுக்க வேண்டும்.
சென்னையில் ஃபோர், பிம்டபிள்யூ போன்ற நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு முறையான இழப்பீட்டை வழங்கி விட்டு தான் காலி செய்தார்கள். அதுபோல மாஞ்சோலை தேயிலை நிறுவனமும் வழங்க வேண்டும். அரசு அந்த தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் அல்லது அவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்" என திருமுருகன் காந்தி கூறினார்.
தொடர்ந்து பேசிய எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், "கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை நடைபெற்றது. அந்த கரையை போக்கிக் கொள்ள திமுக அரசுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே தற்போது மாஞ்சோலை மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்" எனக் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "மின் கட்டண உயர்வால் சிறு, குறு நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது" - முன்னாள் அமைச்சர் காட்டம்!