சென்னை: இலங்கையில் தமிழர்கள் மீது நடக்கும் சித்ரவதைகள் குறித்து ஐ.நா.வினால் நியமனம் செய்த நிபுணர் குழு ஆதாரங்களையும், ஆவணங்களையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மே 17, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை அரசினால் ஈழத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாள் இந்த நாள். மே 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் மட்டும் 70 ஆயிரம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த நிகழ்வை அடையாளப்படுத்துவதற்காகவே எங்களுடைய இயக்கத்திற்கு மே 17 இயக்கம் என்ற பெயர் வைக்கப்பட்டது.
15 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் இலங்கையில் சித்ரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருவதை ஐநாவின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. கடந்த 5 வருடங்களில் இலங்கை அரசினால், காவல் படையினரால், ராணுவத் துறையினரால் 123 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இதில் 51 பேர் இலங்கை காவல்துறையினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
பாலிதீன் கவர்களைக் கொண்டு முகத்தை மூடியும், நீருக்குள் தலையை அழுத்தி ஆசன வாயில் கம்பிகளைச் செலுத்தி சித்திரவதைகளை செய்து வருவதாக ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. தண்ணீர் குழாய் போடுவதற்காக தோண்டப்பட்ட போது மணலுக்கு அடியில் இரண்டு இடத்தில் மனித புதைக்குழிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை குழுவால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான உடல்கள் என்று தெரிந்தபின், இலங்கை அரசு இந்த விவகாரத்தை கைவிட்டது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மோடி அரசு விசாரணை நடத்தாமல், இலங்கை அரசுக்கு ராணுவ பயிற்சி அளிக்கிறார்கள். 10 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள மோடி அரசு, இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணையை ஏன் தடுக்கிறது?
ஒன்றரை லட்சம் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூறும் விதமாக, நாளை மறுநாள் மே 19ஆம் தேதி பெசன்ட் நகர் கடற்கரையில் சுடர் ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்த உள்ளோம். இலங்கைத் தமிழர்களை சித்திரவதைப்படுத்தும் இலங்கை அரசை தண்டிக்க தங்களுடன் இந்திய அரசு கைகோர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பாஜக மட்டும் தான் தவறு செய்ததா? காங்கிரஸ் தவறு செய்யவில்லையா? என்ற கேள்விக்கு, “ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ், பாஜகவும் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளார்கள். காங்கிரசுக்கு 2014-இல் தோல்வியை கொடுத்துள்ளார்கள்.
இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யவில்லை. மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மட்டுமே பிரச்சாரம் செய்தேன், அவர்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்திருந்தால், அந்த கட்சி எடுக்கும் முடிவுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: கோடை கால சிறப்பு ரயில்! ராஜபாளையம் வந்தடைந்த தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு! - Tambaram Kochuveli Special Train