சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையம் வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் போதைப் பொருட்களால் இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். காவல் துறை எதற்காக உள்ளது? முதலமைச்சருக்கு இதெல்லாம் தெரியுமா, தெரியாதா?" என கேள்வி எழுப்பினார்.
அதன் தொடர்ச்சியாக, திருமாவளவன் பாமகவை ஜாதி கட்சி என்று குறிப்பிட்டது தொடர்பாக கேட்கப்படக் கேள்விக்கு, "விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் என்ன கட்சியாம்? பாமக சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி. எத்தனையோ பல சாதனைகள் செய்த கட்சியை திருமாவளவன் தொடர்ந்து இழிவு செய்து வருகிறார். அதனை அவர் தவிர்க்க வேண்டும்.
அதேபோல, விசிகவை பற்றி தரக்குறைவாக எங்களாலும் பேச முடியும். நீங்கள் மாநாடு நடத்தினால் நடத்திக் கொள்ளுங்கள். மது ஒழிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இந்தியாவில் எந்த கட்சி மது ஒழிப்பிற்காக மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம்.
திருமாவளவன் தற்போது தான் மது ஒழிப்பை தொடங்கி இருக்கிறார். ஆனால், எங்கள் நிறுவனர் ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக இருந்தே மது எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர். அந்த வகையில், மது ஒழிப்பில் பாமக PhD முடித்துள்ளது, திருமாவளவன் தற்போது தான் LKG வந்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருந்திருந்தால் முதலில் அவர் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் அழைப்பு விடுத்திருக்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
மது ஒழிப்பு மாநாடு பாமக vs விசிக...#Thirumavalavan #AnbumaniRamadoss #tamilnadunews #TNGovt #vck #PMK #etvbharattamilnadu pic.twitter.com/7lZWlLx3QO
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) September 15, 2024
திருமாவளவன் பதிலடி: இந்த நிலையில், திருச்சியில் இருந்து திருவாரூருக்கு செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், நாங்கள் எல்கேஜி படித்தாலும் சரி, சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும்.
இதையும் படிங்க: “சனாதனத்திற்கு எதிராக பேசுவதை நிறுத்திவிட்டனர்..” - ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் பரபரப்பு பேச்சு!
பாமகவை பற்றி நான் சொல்லக்கூடிய கருத்தை பற்றி கண்டித்துள்ளார்கள். ஆனால் அப்படி சொல்ல வைத்தது அவர்கள்தான். முதன்முதலில் சிதம்பரத்தில் நான் தேர்தலில் நின்றபோது வன்முறையை தூண்ட காரணம் அவர்கள் தான்.
நாங்கள் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் நாங்கள் காயப்படுத்தப்பட்டோம். தமிழர் நலனுக்காக நாங்கள் ரத்த கரையுடன் கை குலுக்கினோம். தலித் சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைத்தது பாமக என்பதை மறுக்க முடியாது அதைத்தான் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன்.
அவர் மது ஒழிப்பு குறித்த கருத்தில் நிலைப்பாடாக இருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எங்களால் அப்படி இணைந்து பயணப்பட முடியாது. தேர்தல் அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டை இணைத்து பார்ப்பதாலேயே இவ்வளவு சர்ச்சை வருகிறது.
இதை சமூக நலனுக்கானதாக பார்க்க வேண்டும். 100 சதவீதம் தூய நோக்கத்தோடு இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கிறோம். இதில் எந்த ஒரு அரசியல் கணக்கும் இல்லை" என்று அன்புமணி ராமதாஸின் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார்.