தூத்துக்குடி: திருச்செந்தூரில் கோயில் யானை தெய்வானை தாக்கி நவம்பர் 18ஆம் தேதி பாகன் உள்பட இருவர் உயிரிழந்த நிலையில், 10 நாட்களாக மருத்துவக் கண்காணிப்பில் இருந்த யானை, தற்போது சிறப்பு யாகம் நடத்தப்பட்ட பின் வெளியில் வந்துள்ளது.
முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. முருகனின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து முருகப் பெருமானை தரிசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை தாக்கி யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து யானை தனிமைப்படுத்தப்பட்டு வனத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் யானையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதையும் படிங்க: இருவரை கொன்ற தெய்வானை யானைக்கு வனத்துறை அனுமதி இல்லையா? - அமைச்சர் ஷாக் தகவல்!
பதினொன்று நாட்கள் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த தெய்வானை யானை தற்போது வெளியில் வந்துள்ளது. முன்னதாக, யானைக்காக கோயில் ஆனந்த விலாச மண்டபத்தில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதில் கும்பத்தில் வைக்கப்பட்ட புனித நீர், கோயில் யானை தெய்வானைக்கு தெளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, யானை கட்டப்பட்டிருந்த அறைக்கும், சம்பவம் நடந்த இடத்திற்கும் இந்த புனித நீர் தெளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அதிகாலையில் யானையை குளிப்பாட்டி, நவதானிய உணவுகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, புனித நீர் தெளிக்கப்பட்ட பிறகு, பாகன்கள் யானையை அறையிலிருந்து வெளியே அழைத்து வந்து அறைக்கு அருகே கட்டியுள்ளனர். அங்கு, யானைக்கு பச்சை நாற்று உணவாக வழங்கப்பட்டுள்ளது. அதை தெய்வானை யானை உண்டு மகிழ்ந்து வருகிறது. இதை அவ்வழியாக செல்லும் பக்தர்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றுள்ளனர்.
தெய்வானை யானை:
யானை தாக்கி பாகன் மற்றும் அவரது உறவினர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, யானை சோகமாகக் காணப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அப்போதும், மற்றொரு பாகனான செந்தில் வழக்கம் போல் தெய்வானையைக் குளிப்பாட்டி அலங்கரித்தார்.
பின் யானைக்கு வழக்கமாக கொடுக்கப்படும் உணவை வழங்கினார். இதையடுத்து நெல்லை வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் யானை தெய்வானையிடம் சாப்பிட்டியா? தண்ணீர் குடித்தாயா? எனக் கேட்டார். அதற்கு அழகாக தலையசைத்து தெய்வானை பதில் அளிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்