சென்னை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என எல்லாரும் செல்லப்பிராணியை வளர்க்க விரும்புகின்றனர். தற்போது பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகள் உள்ளன. ஆனால் வெளிநாட்டிற்கோ அல்லது தொலை தூர பயணங்களுக்கோ செல்லும் போது, தங்களுக்கு விரும்பமான செல்ல பிராணியை அழைத்து சென்று எவ்வாறு கவனித்துக்கொள்வது என்று கவலை கொள்கின்றனர்.
இதனால் மனமில்லாமல் தங்கள் செல்லப்பிராணியை அக்கம் பக்கத்து வீட்டாரிடமோ அல்லது உறவினர் வீடுகளிலோ விட்டுச் செல்கின்றனர். இனிமேல் அப்படி கவலைக் கொள்ள தேவையில்லை. இது பற்றி விரிவான குறிப்புகளை வழங்குகிறார், செல்லப்பிராணிகளுக்கான போக்குவரத்து சேவை நிறுவனத்தின் இணை நிறுவனர் ஃபைசஸ் இஸ்லாம்.
செல்லப்பிராணியுடனான பயணத்தை திட்டமிடுவதற்கு முன் கால்நடை மருத்துவரை அணுகவும்: உங்கள் பயணத்தில் செல்லப்பிராணிகளை அழைத்து செல்வதாக இருந்தால், அதற்கு முன் செல்லப்பிராணியை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று செல்லப்பிராணியின் உடல்நலம் குறித்து பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவ பரிசோதனை ஆவணத்தின் அடிப்படையில், செல்லப்பிராணியை பயணத்திற்கு அழைத்து செல்லலாமா, வேண்டாமா என்பது குறித்து கால்நடை மருத்துவரிடம் கலந்தாலோசனை செய்ய வேண்டும். பயணத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான செல்லப்பிராணியாக இருந்தாலும் கூட, பயணத்திற்கு முன் கூடுதல் தடுப்பூசிகள் மற்றும் சுகாதார சான்றிதழ் தேவைப்படலாம்.
செல்லப்பிராணியின் மருத்துவ ஆவணங்களை எடுத்துச் செல்லவும்: ஒவ்வொரு விமானம் மற்றும் இரயிலில் எடுத்துச் செல்ல சில விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக செல்லப்பிராணியின் மருத்துவ சான்றிதழ், ஆவணங்கள் தேவை. ஆகையினால் அவற்றை எடுத்துச்செல்ல மறக்காதீர்கள். மேலும் செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழும் அவசியம்.
பயணத்திற்கு நீங்கள் மட்டும் தயாராகாமல், உங்கள் செல்லப் பிராணியையும் தயார்ப்படுத்த வேண்டும்: மனிதர்களைப் போலவே செல்லப்பிராணிகளும் பதற்றத்தை உணரும். திடீரென்று தொலைதூர பயணத்திற்கு அழைத்துச் சென்றால், அதன் மனநிலை மாறும். ஆகவே உங்கள் செல்லப்பிராணிகளை பயணத்திற்கு பழக்கப்படுத்துவது அவசியமானது. அதற்கு உங்கள் செல்லப்பிராணிகளை இரண்டு அல்லது மூன்று முறை பயணமாக அழைத்துச் செல்லலாம். இதன் மூலம் உங்கள் செல்லப்பிராணிகளின் நடத்தையை கவனித்து, அதற்கு தேவையானவற்றை செய்து கொடுக்கலாம்.
செல்லப்பிராணியின் மைக்ரோசிப்பை புதுப்பிக்க வேண்டும்: செல்லப்பிராணிகளை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லும் போது, அதன் மீது மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருப்பது அவசியம். நீங்கள் உங்கள் செல்லப்பிராணியுடன் சுற்றுலா செல்ல இருந்தாலும், செல்லப்பிராணிக்கு மைக்ரோசிப் செய்ய மறக்காதீர்கள். செல்லப்பிராணியின் மைக்ரோசிப் என்பது ஒரு தனித்துவமான குறியீட்டுடன் இருக்கும். இந்த மைக்ரோசிப்பில் செல்லப்பிராணியின் இனம், வயது, நிறம் மற்றும் உரிமையாளர் விவரங்கள் போன்ற அடிப்படை தகவலள் இருக்கும்.
பயண வசதியை தேர்ந்தெடுங்கள்: ஒவ்வொரு விமான நிறுவனமும் செல்லப் பிராணியை சில கொள்கைகள் வைத்துள்ளன. ஆக, நீங்கள் தான் உங்கள் செல்லப்பிராணி பயணம் செய்வதற்கு ஏற்ற வசதியான கூடையை தேர்ந்தெடுக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் அந்த கூடையில், சரியான உணவு மற்றும் நீர், கம்பளம், பொம்மைகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சில விமான நிறுவனங்கள் சிறிய பூனைகள் மற்றும் நாய்களை கேபினில் மென்மையான கூடையில் பயணிக்கவும், மற்ற பெரிய நாய் மற்றும் பூனைகளை சரக்குகளுடன் கொண்டு செல்ல அனுமதிக்கின்றன. ஆகவே நீங்கள் பயணம் செய்ய விரும்பும் விமானத்தின் விதிமுறைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம். ரயிலில் செல்லப்பிராணிகளை உடன் அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இரண்டாம் வகுப்பு மற்றும் பிரேக் வேனில் உள்ள நாய் பெட்டியில், உங்களது செல்லபிராணிகளை கொண்டு செல்லலாம்.
ஒரு வேளை நீங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை உங்களுடனே உடன் அழைத்து செல்ல வேண்டுமென்றால், நான்கு இருக்கைகள் கொண்ட கேபின் அல்லது இரண்டு இருக்கை கொண்ட முதல் வகுப்பு ஏசி பிரிவில் டிக்கெட்டுகளை புக் செய்து செல்லப்பிராணிகளை அழைத்து செல்லாம். ரயில் பயணத்தின் போது, உங்களது செல்லப்பிராணிகளுக்குத் தேவையான உணவு, தண்ணீர் போன்றவற்றை நீங்கள் தான் எடுத்துச் செல்ல வேண்டும்.
உங்கள் செல்லப்பிராணிக்கு பயணத்திற்கு முன் உணவளிப்பதை தவிர்க்க வேண்டும்: விமானத்தில் பறப்பது உங்கள் செல்லப்பிராணிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதால், பயணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, உங்கள் செல்லப்பிராணிக்கு சிறிது உணவை கொடுக்கலாம். அதிக உணவை கொடுக்காமல் இருப்பது சிறந்தது.
இந்த குறிப்புகளை பின்பற்றி உங்கள் செல்லப்பிராணியுடன் உங்களது நாட்களை சிறப்பாக்குங்கள்.
இதையும் படிங்க: இரவில் சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன? அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்..!