புதுக்கோட்டை: புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில், அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை திறந்து வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் வெப்ப அலை வீசுகின்றது என்று ஏற்கனவே அரசுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தேன்.
ஹீட் ஸ்டோக் பாதிப்பு உயிரிழப்பை கூட ஏற்படுத்தும். அதனால் வெயிலில் பணியாற்றும் தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டும். சென்னையில் அரசு கோடை கால வார்டு தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோன்று, அனைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் சிறப்பு வார்டுகளை திறக்க வேண்டும்” என்றார்.
தற்போது கரோனா தடுப்பூசி குறித்த அச்சம் மக்கள் மத்தியில் எழுந்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "எந்த தடுப்பு மருந்துகளும் பல கட்ட சோதனைக்குப் பின் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. கரோனா தடுப்பு மருந்துகள் எல்லாம் இக்கட்டான காலகட்டத்தில் நமக்கு துணை நின்றன.
இந்த தடுப்பூசிகள் 10 லட்சம் பேரில் ஒருவருக்கு அரிதாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், அது கரோனா தடுப்பூசி மட்டுமின்றி, போலியோ சொட்டு மருந்து கூட அரிதாக பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இப்போது வரும் தகவல்களால், கரோனா தடுப்பூசி குறித்து பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை, எனினும் வல்லுநர் குழுவினர் இன்னும் கூடுதலான ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் சந்தேகத்தை போக்க வேண்டும்” எனக் கூறினார்.
திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஜயபாஸ்கர், “தற்போது வெயிலின் தாக்கம் மக்களுக்கு எவ்வாறு உள்ளதோ, அவ்வாறு தான் ஆட்சியும் உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: சென்னையில் ஒரு நாள்.. சேலத்தில் இருந்து பறந்த இதயம்! - Heart Transplant