சென்னை: கோடை காலம் நெருங்கிவரும் சூழலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் உள்ளிட்ட துறைசார் உயர் அதிகாரிகளுடன் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, “குடிநீர் வசதி எல்லா இடங்களிலும் சரியாக உள்ளதா, பழுது பார்க்க வேண்டிய இடங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. கோடை காலம் நெருங்குவதால், ஒவ்வொரு இடத்திலும் குடிநீர் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு, அனைத்து இடங்களுக்கும் சீரான குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டது.
மோட்டார்கள் சரியில்லாத இடங்களில் சரி செய்யும் வகையிலும், பைப்புகள் பழுதடைந்து இருக்கும் இடங்களில் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது. சென்னையைப் பொறுத்தவரை, 1040 எம்.எல்.டி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக கோடை காலம் என்பதால் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம் 150 எம்.எல்.டி வழங்கப்பட உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க. பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
சிஎம்டி மூலம் கடந்த ஆண்டு 1,000 கோடி வழங்கப்பட்டது, அதில் 500 கோடி மெட்ரோ தண்ணீர் வழங்க கொடுக்கப்பட்டுள்ளது. 150 கோடி மாநகராட்சிக்கு வழங்கபட்டுள்ளது. இந்த ஆண்டு 9,050 கோடி வடசென்னையில் குழாய் மாற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் எல்லாம் தேவைப்படுகிறதோ, அதற்கான பணி தொடங்கப்படும். இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்; 11வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!
கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம், சென்னையில் கூடுதலாக 150 எம்எல்டி விநியோகிக்கப்பட உள்ளது. இதேபோன்று மதுரையிலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு வரும் இடத்திலும், தேவைப்படும் இடத்திலும் பணிகளைச் சரியாக செய்து வருகிறோம். எனவே, ஏரிகளில் தண்ணீர் இருப்பு போதுமானதாக இருக்கிறது.
வீராணம் ஏரியில் மட்டும்தான் தண்ணீர் சற்று குறைவாக வழங்கப்படுகிறது. அதுவும், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம், 150 எம்எல்டி கூடுதலாக வழங்குவதால், அதனாலும் பிரச்சினை இல்லை. குவாரிகளில் இருந்தும் தேவைக்கேற்ப தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும், 9 தொகுதிகள் வழங்கவில்லை என்றால், தனித்து போட்டி குறித்து அகில இந்திய தலைமை முடிவெடுக்கும் என செல்வப்பெருந்தகை கூறி இருப்பது குறித்த கேள்விக்கு, “எனக்கு செல்வபெருந்தகை கூறியது குறித்து தெரியாது நீங்கள் யாராவது பெரிய ஆட்களை பார்த்து கேளுங்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்” - மதிமுக திட்டவட்டம்!