தேனி: ஆண்டிபட்டி அருகே தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கடந்த 2004ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் உள்நோயாளிகளாக 1,600 பேரும், வெளி நோயாளிகளாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவக் கல்லூரி பல்வேறு சாதனைகளை பல கட்டங்களில் நிகழ்த்தியுள்ளது.
அந்த வகையில், தற்போது உடற்கூறியல் துறையில் உடல் உறுப்புகள் மற்றும் அதன் முழு உடலை பாதுகாப்பாக வைக்க பைபர் கிளாஸ் எம்பார்மிங் என்ற புதிய முறையை, உலகிலேயே முதன் முதலில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறை தலைவர் மருத்துவர் எழிலரசன் தலைமையிலான மருத்துவர் குழுவினர் அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளனர். தற்போது, இதற்கான காப்புரிமை வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.
இது குறித்து தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலசங்கர் செய்தியாளர்களிடம் கூறியாதாவது, “உடல் கூறியல் அருங்காட்சியகத்தில் மனித உடல் மற்றும் உடல் உறுப்புகளை பாதுகாக்கும் முறைகளில் இழைக் கண்ணாடியில் பாதுகாக்கப்படுவது என்பது புதிய முயற்சியாகும்.
பிளாஸ்டினேசன் (Plastination): பிளாஸ்டினேசன் என்னும் முறை முதல் முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த கந்தர் என்பவரால் 1977-ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு சில மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே இம்முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும், அரசாங்க மருத்துவக் கல்லூரிகளில் அரசு தேனி மருத்துவக் கல்லூரியில் தான் முதல் முறையாக இம்முறை செய்யப்பட்டுள்ளது. இம்முறையானது உடல் கூறியல் துறை தலைவரான மருத்துவர் எழிலரசன் என்பவரால் 2012-ல் ஆரம்பிக்கப்பட்டது.
பைபர் கிளாஸ் எம்பார்மிங்: இப்போது இந்த பிளாஸ்டினேசன் செய்த உடல் உறுப்புகள் மற்றும் அதன் முழு உடலை பாதுகாப்பாக வைக்க பைபர் கிளாஸ் எம்பார்மிங் என்ற புதிய முறையை உலகில் முதன் முதலில் அரசு தேனி மருத்துவக் கல்லூரி, உடல் கூறியல் துறையில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதற்கு காப்புரிமை வேண்டியும் விண்ணப்பித்துள்ளோம்.
இம்முறையில் ரெசின் என்ற ரசாயனப் பொருளை உயர் வெப்பத்தில், 100 டிகிரி பிளாஸ்டினேசன் செய்யப்பட்ட உடல் மற்றும் உடல் உறுப்புகள் மீது ஊற்றப்பட்டு, மிகவும் குறைவான வெப்பம் (20 டிகிரி சென்டி கிரேட்) உள்ள அறையில் 24 மணி நேரம் வைக்கப்பட்டு, பின்னர் உலர வைக்கப்படுகிறது.
இந்த பைபர் கிளாஸ் எம்பார்மிங் முறையில் தயாரிக்கப்படும் உறுப்புகள் மற்றும் மனித உடல்களை எளிதில் அழிக்க முடியாது. வருடக்கணக்கில் பாதுகாப்பாக வைக்கலாம். மேலும், இம்முறை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. உடல் கூறியல் துறையில் மாணவர்களின் கல்விக்கு உபயோகப்படுத்தலாம்.
நோய்க்குறியியல் துறைக்கான மாதிரிகளையும் இம்முறையில் பயன்படுத்தலாம். குறைபாடு உள்ள சிசுக்கள், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வேண்டாத மனித உறுப்புகள், குறுக்கு வெட்டு மாதிரிகள் போன்றவற்றையும் சம்பந்தப்பட்ட துறைகளில் வைத்து மாணவர்களின் கல்விக்கு உபயோகப்படுத்தலாம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மருத்துவக் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், துறை தலைவர்கள், மருத்துவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: போட்டானிக் பிராசசர் சிப்புகள் உருவாக்கம்.. மலேசியா சில்டெராவுடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம்! - IIt Madras