விழுப்புரம்: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. விக்கிரவாண்டியில் நடக்கவுள்ள மாநாட்டு ஏற்பாடுகளில் ஒப்பந்ததாரர்கள் பம்பரமாக சுழன்று இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
நேற்று மாநாட்டு முகப்பு வாயிலில் இருந்து, மாநாட்டு திடல் வரை வழியில் இருபுறமும் 35 அடி உயரத்தில் 500 கொடி கம்பங்கள் நட்டு அதில் 15 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட வெல்வெட் துணியிலான கட்சி கொடியை பறக்க விட்டுள்ளனர். இதேபோன்று, மாநாட்டு திடலில் 900 கொடி கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநாட்டு பணிகளை பார்வையிட வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நுழைவு வாயிலில் உள்ள தனியார் நிறுவன பவுன்சர்கள், உள்ளே விட மறுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு பதில் முதலமைச்சர் ஆகி இருக்க வேண்டியவரா? ஆர்.வைத்திலிங்கத்தின் அரசியல் பயணம்!
பவுன்சர்களால் விவசாயிகள் தங்களுடைய விலை நிலங்களுக்கு செல்ல முடியவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்ததன் பெயரில் நேற்றைய தினம் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த இருப்பு வேலிகளை அகற்றி விவசாயிகளை உள்ளே செல்ல அனுமதித்தனர்.
மேலும், போலீசார் மட்டும் அவ்வப்போது மாநாட்டு திடலினுள் சென்று பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையோரம் மாநாடு நடத்த அனுமதியும், சாலை பாதுகாப்பு மேம்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க வேண்டி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், 'நகாய்' திட்ட இயக்குனர் வரதராஜனிடம் கேட்டுக் கொண்டார்.
அதன்பேரில், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை டோல்பிளாசா மேலாளர் சதீஷ்குமார், பி.ஆர்.ஓ., தண்டபாணி, பாதுகாப்பு மேலாளர் மனோஜ்குமார் ஆகியோர் நேற்று மாநாட்டு திடலை பார்வையிட்டு சென்றனர்.
இந்த நிலையில், மாநாடு விளம்பரப்படுத்துவதற்காக விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் கிராமத்தில் மாநாட்டு விளம்பர பலூன் பறக்க விடப்பட்டது. இதனை பொதுமக்கள் மட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தங்களுடைய செல்போனில் படம் பிடித்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்