நீலகிரி: கோடை விடுமுறை என்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாலும், மக்கள் மலைப் பிரதேசங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றலா தளங்களுக்கு மக்களின் வருகை அதிகம் உள்ளது.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு நாளை (மே.07) முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ் கட்டாயம் என நேற்று (மே.05) அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இ-பாஸ் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.
கூட்ட நெரிசலை இ-பாஸ் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றும் குறித்த நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தளங்களுக்குச் சென்று வர முடியும் என்றும் போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் சாலையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்படாது என்றும் சமூக ஆர்வலர் ஜெயக்குமார் கூறுகிறார்.
இருப்பினும், இ-பாஸ் எதிரொலியால் நீலகிரி மாவட்ட நுழைவாயிலில் அமைந்துள்ள காட்டேரி பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. இதனை நம்பி முதலீடு செய்த வியாபாரிகள் பொருட்கள் விற்பனை ஆகாமல் தவித்து வருகின்றனர்.
தற்போது குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரமாகக் காத்திருந்து பயணிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்து வருகின்றனர். மேலும், கொண்டை ஊசி வளைவுகளில் மெதுவாகச் செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தை பிடித்து அசத்திய மாவட்டம் எது? - Tn 12th Result 2024