கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பும் வகையில், தொடர்ந்து செய்திகளை வெளியிட்டதாக, நக்கீரன் வார இதழ் பத்திரிகையை கண்டித்து கோவையில் அக். 27 ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனும், இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரான ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டார்.
அந்த கூட்டத்தில் பேசிய ஓம்கார் பாலாஜி, நக்கீரன் பத்திரிகை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக ("ஈஷா யோகா மையத்திற்கு எதிராக செய்தி வெளியிடும் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், நாக்கை அறுத்துவிடுவோம்" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.) அப்துல் ஜலீல் என்பவர் அளித்த புகாரில் ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், குற்ற நோக்குடன் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ஓம்கார் பாலாஜி, தாக்கல் செய்த மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், காவல்துறையால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: "ஒத்திப்போகும் அரையாண்டு தேர்வுகள்".. என்ன காரணம்? அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!
இந்நிலையில், ஜாமீன்கோரி ஓம்கார் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, தினமும் காலை 10.30 மணிக்கு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்து ஓம்கார் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
முன்னதாக கடந்த முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓம்கார் பாலாஜி தரப்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓம்கார் பாலாஜி கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அவரை நோக்கி நீதிபதி கடுமையாக கேள்விகளை முன்வைத்தார்.
அதற்கு ஓம்கார் பாலாஜி, "அந்த நேரத்தில் ஏற்பட்ட கோபத்தில் அப்படி பேசிவிட்டேன்" என்று குறிப்பிட்டதோடு, மன்னிப்பு கோர தனக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்தார். இதனால் முன் ஜாமீன் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, ஓம்கார் பாலாஜியை போலீ்ஸ் கைது செய்ய தடையில்லை என்று உத்தரவிட்டுருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.