சென்னை: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 20 சென்டிமீட்டர், எமரால்டில் 12 சென்டிமீட்டர் என்ற அளவில் மிக கனமழை பெய்துள்ளது. அடுத்தபடியாக அப்பர் பவானியில் 10 சென்டிமீட்டர், பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரளா, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கன முதல் மிக கனமழையும், கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு உள்கர்நாடகாவில் இன்றைய தினம் அதிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் பலத்த சூறைக்காற்று வீசும் வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நீலகிரிக்கு இன்னும் காத்திருக்கு.. கோவையிலும் வாய்ப்பு.. வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை! - Chennai Meteorological center