மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு பகுதியில் தங்கும் விடுதியுடன் பிரபல தனியார் சைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், மயிலாடுதுறை அருகே மூவலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சுந்தர் (45) என்பவர், தனது குடும்பத்தினருடன் வைத்திஸ்வரன் கோயிலுக்குச் சென்று விட்டு திரும்பி வரும் வழியில், இந்த சைவ உணவகத்தில் உணவு அருந்தச் சென்றுள்ளார்.
இதனை அடுத்து, அவரது மனைவி தேவி, 12 வயது மகள் சிவபிரியை மற்றும் உறவினர்கள் தோசை, இட்லி, பன்னீர் பரோட்டா என தனித்தனியே ஆர்டர் செய்து சாப்பிட்டதாகவும், அப்போது சுந்தரின் 12 வயது மகள் சாப்பிட்ட பன்னீர் பரோட்டாவில் முழு கரப்பான் பூச்சி ஒன்று இறந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், அந்த கரப்பான் பூச்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கேயே வாந்தி எடுத்து, தனக்கு வயிறு வலிப்பதாகவும் கூறியதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை சுந்தர், உணவு பாதுகாப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை சுந்தர் கூறுகையில், "என் மகள் சாப்பிட்ட பன்னீர் பரோட்டாவில் முழு கரப்பான் பூச்சி ஒன்று இறந்த நிலையில் இருந்தது குறித்து உணவக நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, அவர்கள் அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை.
மேலும், உணவகத்தில் அதிகளவில் ஈக்கள் உள்ளது. உணவகத்தைச் சுற்றிலும் பூனை சத்தம் கேட்கிறது. தற்போது இச்சம்பவம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு குறுஞ்செய்தி மூலம் புகார் அனுப்பியுள்ளேன். ஆனால், இதுவரை பதில் கிடைக்கவில்லை" என்று கூறினார்.
அதேநேரம், இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில், "உணவு சமையல் செய்யும்போது, உணவில் எதுவும் விழவில்லை. மேலும், உணவில் கிடப்பது கரப்பான் பூச்சி அல்ல, ஈசல்தான் விழுந்துள்ளது. அதற்கு மன்னிப்பும் கோரியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்.. குடும்பத்துடன் விவசாயி தர்ணா!