மதுரை: சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளமெண்ட் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், "மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பரிசாக 2016-ஆம் ஆண்டு திருச்சி அருகேயுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு முதுமலை தெப்பக்காட்டில் வளர்ந்த யானை மாசினியை வழங்கினார்.
யானைப் பாகன் கஜேந்திரன் கண்காணிப்பில் யானை மாசினி வளர்ந்தது. மற்ற யானைகளிடம் இருந்து பிரிந்து கோயிலுக்கு வந்த பின் யானையின் நடவடிக்கையில் பல மாற்றங்கள் தெரிந்தது. வனப்பகுதியில் இருந்த போது சுறுசுறுப்பாக இருந்த யானை கோயிலில் தனிமைப்படுத்தப்பட்டதால் யானையின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மாசினி, தன்னை கோயிலில் பராமரித்த யானைப் பாகன் கஜேந்திரனை திடீரென தூக்கி வீசி மிதித்துக் கொன்றது. யானைக்கு மதம் பிடித்ததை அறிந்த பக்தர்கள், அலறி அடித்து ஓடினர். அப்போது மேலும் சில பக்தர்களை யானை துதிக்கையால் தள்ளி விட்டதில் 9-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை ஆராய்ச்சி கல்லூரிக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டது. தஞ்சாவூர் ஒரத்தநாடு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் உள்ள சமயபுரம் கோயில் யானையை மீண்டும் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சேர்க்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, முதுமலை தெப்பக்காடு முகாமில் சேர்த்து போதிய மருத்துவச் சிகிச்சை வழங்க உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி தனபால் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சமயபுரம் கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "யானை தற்போது நல்ல உடல்நிலையோடு ஆரோக்கியமாக உள்ளது. யானை பராமரிப்பிற்காகக் கோயில் நிர்வாகம் சார்பில் 10 லட்ச ரூபாய் வனத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், "முதுமலை யானைகள் முகாமில் வனத்துறை அதிகாரிகள் சமயபுரம் கோவில் யானையைத் தொடர்ந்து பராமரிப்பு செய்யவும், கண்காணிக்கவும் வேண்டும். மேலும், வாரம் ஒருமுறை கால்நடைத்துறை மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: 5,765 கீழடி அகழாய்வுப் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!