மதுரை: திருச்சியைச் சேர்ந்த சிவா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "செட்டிநாட்டில் கால்நடை பண்ணை 1907 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த பண்ணையில் 2வது உலகப் போரின் போது அமைக்கப்பட்ட இரண்டு விமான ஓடுதளங்கள் அமைந்துள்ளன.
பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, கானாடுகாத்தான் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கக்கூடிய காரைக்குடி பகுதிக்கு வெளிமாநிலத்தினரும் வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர். சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் போன்ற சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உலகெங்கிலும் வேலை பார்த்து வருகின்றனர்.
இதுதவிர மத்திய தொழிற் படை, மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் ஆகியவை அமைந்துள்ளதால் விஞ்ஞானிகள், மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள், மத்திய அரசில் பதவி வகிப்பவர்கள் அடிக்கடி காரைக்குடிக்கு வந்து செல்கின்றனர்.
இதுமட்டும் அல்லாது, செட்டிநாடு பலகார வகைகள், கண்டாங்கி சேலைகள், ஆத்தங்குடி டைல்ஸ் போன்றவை வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகிறது. மேலும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த சினிமா துறையினர் படப்பிடிப்பிற்காக காரைக்குடி பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இதையும் படிங்க: நில ஆக்கிரமிப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
இவ்வாறான பல முக்கியத்துவங்களை உள்ளடக்கிய காரைக்குடி பகுதியில் விமான நிலையம் அமைக்க சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். விமான நிலையம் அமைந்தால் தொழில் துறை நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் உட்பட இப்பகுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெறுவதோடு வணிகம் மற்றும் போக்குவரத்து சம்பந்தமான தொழில்களும் பெருமளவில் உயரும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
எனவே, காரைக்குடி கானாடுகாத்தான் விமான நிலைய ஓடுதள பாதையை சீரமைத்து, காரைக்குடியில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான சேவைகளை உள்ளடக்கிய பயணிகள் விமானநிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த விசயத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்