சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டுத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசினார். அப்போது, "கேரள ஆளுநர் இரண்டு வார்த்தை பேசிவிட்டு வெளிநடப்பு செய்தார்.
ஆனால் தமிழக ஆளுநர் அரசின் உரையிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் தன்னுடைய சொந்தமான சில கருத்துக்களை கூறிவிட்டு அமர்ந்து விட்டார். சட்டப்பேரவையின் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுவது என்பது மரபு. இது குறித்து கடந்த ஆண்டு சபாநாயகர் விளக்கமாக எடுத்துரைத்து விட்டார்.
இருந்தபோதிலும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக ஆளுநர் தேசிய கீதம் முதலில் இசைக்கப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை மட்டும் வைத்து அமர்ந்து விட்டார். தனக்கு எழுதிக் கொடுத்த உரையில் ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால் ஆளுநர் அதனை முன்பே கேட்டிருக்கலாம். ஏனென்றால் அரசு சார்பாக ஆளுநருக்கு எழுதி கொடுத்த உரையை ஒப்புக் கொண்டுதான் அவர் இன்றைய பேரவையில் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு இன்றைக்கு இந்திய அளவில் பல்வேறு துறைகளில் முதல் இடத்தில் இருக்கிறது. இதையெல்லாம் ஆளுநர் உரையில் நாங்கள் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் படிக்க விருப்பமில்லாமல் இந்த அரசினுடைய சாதனைகளை வாசிக்க விருப்பமில்லாமல் உரையை புறக்கணித்துள்ளார்.
இதற்கு முன்பு தெலுங்கானாவில் ஆளுநர் உரை இல்லாமல் பேரவை நடத்தப்பட்டது. தமிழக அரசும் நினைத்திருந்தால் அதுபோலவே செய்திருக்கலாம். ஆனால் ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுத்து அவரது உரையோடு பேரவைதொடங்க வேண்டும், சுமூகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைத்தோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இதற்கு முன்பு இருந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலித்தாவின் பெயர் மற்றும் அவர் தொடங்கி வைத்த திட்டங்கள் பற்றியும் கூறப்பட்டிருக்கும். அதையெல்லாம் அப்போது இருந்த ஆளுநர்கள் வாசித்தார்கள். ஆனால் இந்த ஆட்சியின் ஆளுநர் உரையில், இந்த அரசங்காம் என்றே பெரும்பாலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
முதலமைச்சரின் பெயர் மூன்றே மூன்று இடங்களில் மட்டும் தான் இடம்பெற்றிருக்கும். அப்படி இருக்கின்ற இந்த உரையை படிக்க ஆளுநருக்கு மனம் இல்லை. நாங்கள் மரியாதையுடன் தான் ஆளுநரை அழைத்தோம். ஆனால் அவர் அந்த மரியாதையை காப்பாற்றிக் கொள்ளவில்லை என்பதை இன்றைய சட்டப்பேரவை நிகழ்வைக் கொண்டு ஆளுநர் தொடர்பான வழக்கில் எங்கள் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைப்பார்கள் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரோஜ்கர் மேளா: நாடு முழுவதும் இன்று 1 லட்சம் பேருக்கு பணி ஆணை வழங்கும் பிரதமர்!