தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன்-பாலசுந்தரி தம்பதியின் இளைய மகன் கருப்பசாமி (10) அங்குள்ள நகராட்சி பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த திங்கட்கிழமை காலை, சிறுவன் கருப்பசாமி மாயமானான். அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலையில் வீட்டின் அருகே உள்ள மொட்டை மாடியில் சடலமாக மீட்கப்பட்டான். சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கும் போலீசார், குற்றவாளிகளை பிடிக்க எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் ஐந்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், சிறுவன் உயிரிழந்து மூன்று நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிக்கவில்லை.
தாத்தா ஆவேசம்
இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும், தடயவியல் நிபுணர்களைக் கொண்டு தடயங்களை சேகரிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், உயிரிழந்த சிறுவன் கருப்பசாமியின் தாத்தா கருத்தபாண்டி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன் என தெருவில் ஆக்ரோஷமாக பேசினார்.
அப்போது அவர், '' 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பீடி துண்டை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்தது காவல்துறை.. அப்போது செல்போன் இருந்ததா? சிசிடிவி கேமரா இருந்ததா?.. பேரன் செத்து போயி மூணு நாளாச்சு.. இதுவரை ஒரு துப்புக்கூட கிடைக்கல. ஒரு வங்கியில் கொள்ளை அடித்தவர்களை சில மணி நேரத்தில் தனிப்படை அமைத்து பிடிக்கும் காவல்துறை, பத்து வயசு சிறுவனின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை மூன்று நாட்களாக கண்டுபிடிக்காமல் இருக்கிறது. ஒரு சிறுவன் காணாமல் போனான்.. அந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள மொட்டை மாடியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான்..
கண்டுபிடிக்காதது ஏன்?
அவன் என்ன ஆனான்? அவனை கொலை செய்தார்கள் என்றால் எப்படி அவனை அதே இடத்தில் உள்ள வீட்டு மொட்டை மாடியில் தைரியமாக போட்டிருப்பார்கள்? இதற்கு பதில் சொல்லுங்கள்.. இன்று ஆயிரக்கணக்கான கேமராக்கள் இருந்தும், சிறுவன் இறந்து மூன்று நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது ஏன்?'' என ஆவேசமாக காவலர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். அவரை காவலர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
முன்னதாக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை காவல்துறை அலசியத்தில், சம்பவம் நடந்த காலையில் இருந்து சிறுவன் வெளியே சென்றதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை. ஆகையால் சிறுவன் அப்பகுதியில் உள்ள ஏதோ ஒரு வீட்டில் மறைத்து வைத்து அல்லது ஏதோ ஒரு பகுதியில் மறைத்து வைத்து கொலை செய்யப்பட்ட பின்னர் உடலைப் போட்டுச் சென்றுள்ளனரா? உண்மையில் நகைக்காக தான் இந்த சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேற ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.