சென்னை: சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி பகுதியைச் சேர்ந்த தம்பதி லோகேஷ்- சோபனா. இவர்கள் அதே பகுதியில் ''SONA DE PARIS'' என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இவர்கள் அதே பகுதியில் செயல்பட்டு வரும் மற்ற அழகு நிலையங்களை விட மிக குறைந்த கட்டணங்களை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் மற்ற அழகு நிலையங்களின் உரிமையாளர்கள் குறைந்த கட்டணம் வசூலிக்க கூடாது என்று கூறி பல முறை சோபனா- லோகேஷிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு அண்ணாநகர் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வரும் ஷாம் குமார் என்பவர் சோபனாவின் அழகு நிலையத்திற்கு இரண்டு பெண்களை வாடிக்கையாளர்களை போல அனுப்பியுள்ளார்.
அந்த பெண்கள் சோபனாவிடம் பேச்சு கொடுத்து கட்டண விவகாரங்களை கேட்டறிந்து சோபனாவின் செல்போன் எண்ணையும் வாங்கி சென்றுள்ளனர். இதன் பிறகு கடந்த 22-ம்தேதி ஷாம் குமார், பரத், ஆனி உள்பட 5 பேர் மீண்டும் சோபனாவின் அழகு நிலையத்துக்கு வந்தனர்.
அப்போது அவர்கள் அங்கிருந்த சோபனா, லோகேஷிடம் ''குறைந்த செலவில் இது போன்று கடை நடத்தினால் நாங்கள் எப்படி தொழில் செய்ய முடியும்? அதிக விலைக்கு நான் தொழில் நடத்துவதாக ஏன் தேவையில்லாமல் வெளியே கூறி வருகிறீர்கள் என கூறி ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.
மேலும், வாக்குவாதம் முற்றவே லோகேஷ் மற்றும் அவரது மனைவி சோபனாவை அந்த கும்பல் அடித்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த தம்பதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தம்பதி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சிசிடிவி காட்சியில் பதிவான தாக்குதல் நிகழ்வை ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து, தம்பதி மீது தாக்குதல் நடத்திய ஷாம் குமார், பரத், ஆனி உள்பட 5 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 143- சட்டவிரோதமாக கூடுதல், 323- காயம் ஏற்படுத்துதல், 294(பி)- ஆபாசமாக திட்டுதல், 427- பொருட்களை சேதப்படுத்துதல், 506(1)- கொலை மிரட்டல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அசந்த நேரத்தில் கைவரிசைய காட்டிய பெண்கள்.. கடைக்காரரே போலீசிடம் பிடித்து கொடுத்ததன் பின்னணி என்ன?