வேலூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டையைச் சேர்ந்த சிவக்குமார்(30) என்பவர் கொலை வழக்கில், தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்தார். இந்த நிலையில், வேலூர் சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைக்கு அழைத்து சென்றபோது ரூ.4.50 லட்சம் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடியதாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி சிறைத்துறை வார்டன்கள் கண்மூடித்தனமாக தாக்கி சித்ரவதை செய்தாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "எனது மகன் மீதான பொய் குற்றச்சாட்டு குறித்து தீர விசாரிக்க வேண்டும் என்றும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்" என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேலூர் முதன்மை குற்றவியல் நீதிபதி நேரடியாக சிறைக்கு சென்று விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில், வேலூர் முதன்மை குற்றவியல் நீதிபதி ராதாகிருஷ்ணன் வேலூர் மத்திய சிறையில் இருந்த சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி, அதற்கான அறிக்கை உயர்நீதிமன்றத்தில் வழங்கினார்.
இதையும் படிங்க: "சிறைக் கைதிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை!
இதனை அடுத்து, உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் தாக்கப்பட்டது தொடர்பாக சிறைத்துறை அலுவலர்கள் 3 பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தவறிழைத்த சிறைத்துறை அலுவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் குற்றவழக்கு தொடர வேண்டும்.
மேலும், சிறைவாசி சிவகுமாரை உடனடியாக சேலம் மத்திய சிறைக்கு இடம் மாற்ற வேண்டும். சிறைத்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக சிபிசிஐடி தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யவேண்டும். அத்துடன், சிறைவாசிகளின் அனைத்து உரிமைகள் உறுதி செய்யப்படுவதை நீதிமன்றம் இனி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என்றும் நீதிபதிகள் தங்கள் இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதனை அடுத்து, வேலூர் மத்திய சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார், சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார், வேலூர் டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் சிறை கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான், ஜெய்லர் அருள்குமரன், சிறை தனி பாதுகாப்பு அதிகாரி அருள்குமரன், டிஐஜி ராஜலட்சுமியின் PSO ராஜு, சிறை காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்ச்செல்வன், விஜி, பெண் காவலர்கள் சரஸ்வதி, செல்வி, சிறை வார்டன் சுரேஷ், சேது ஆகிய 14 நபர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாது, தற்போது சேலம் சிறையில் உள்ள சிவக்குமாரிடம் நேற்று (செப்.10) சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது சிபிசிஐடி எஸ்.பி. வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசார் வேலூர் மத்திய சிறைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.