சென்னை: சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வேஷ்டி மற்றும் சேலையில் 67 கோடி ரூபாய் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக கூறி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் தமிழக பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன் மற்றும் பிற பாஜக நிர்வாகிகள் புகார் மனு கொடுத்தனர்.
இதனை அடுத்து பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்யும் திமுக செய்கின்ற ஊழலை ஒன்றொன்றாகக் கொண்டு சென்று மக்களுக்கு வெளிக்காட்டும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக, திமுக files 1,2 மற்றும் 3, ஆ.ராசா, கனிமொழி மற்றும் சபரிசன் ஆடியோ விகாரம் என அனைத்தையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
அந்த வகையில், அமைச்சர் காந்தியின் ஊழலைக் குறிப்பிட்டு லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளோம். பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வேஷ்டி மற்றும் சேலையில் 67 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. மேலும், அரசு விலையில் இருந்து ரூ.160 வித்தியாசம் வருகிறது.
பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட வேஷ்டி மற்றும் சேலையில், காட்டன் பயன்படுத்துவதற்குப் பதில் 78% பாலியஸ்டர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. 320 ரூபாய் காட்டனுக்கு பதில் 160 ரூபாய் குறைவு விலையில் பாலிஷ்டர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டும் அல்லாது, 260 ரூபாய் மதிப்பீட்டில் கிடைக்கும் காட்டனை 320 ரூபாய் என அரசு கூறியுள்ளது.
ஆகவே, இந்த ஊழல் சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். இந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். மேலும், இந்த ஊழல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர உள்ளோம்" என்று தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாகச் சட்டமன்றத்தில் ஆளுநர் 4 நிமிடத்தில் உரையை முடித்துக் கொண்டு வெளிநடப்பு செய்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஆளுநருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சட்டமன்றத்தில் ஆளுநருக்கும் தமிழக அரசிற்கும் இடையில் நடக்கும் பிரச்சனைக்கு பாஜக பதில் தர வேண்டிய அவசியம் இல்லை" என்று பதில் அளித்தார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு.. துரைமுருகன் கொண்டுவந்த முக்கிய தீர்மானம்!