தஞ்சாவூர்: திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சன்னாபுரம் கிராமத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் இடங்களுக்கு பட்டா வழங்காததால் ஆத்திரமடைந்த மக்கள், இன்று (பிப்.28) தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சன்னாபுரம் கிராமத்தில் வசித்து வரும் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் நிலங்களுக்கு, 1925ஆம் ஆண்டு வரை பட்டா இருந்துள்ளது. அதன் பின்னர், நில வகைப்பாடு செய்யும்போது, தவறுதலாக அது கோயில் இடம் என வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த குடும்பங்கள் தற்போது வரை பட்டா பெற முடியாமல், பத்திரப் பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படாத நிலையில், இன்று இறுதி கட்டமாக வருகிற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் நோக்கில், தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை 4 அட்டை பெட்டிகளில் போட்டு, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டு அமைதியாக வீடு திரும்பியுள்ளனர். இந்த நூதன போராட்டத்தை அடுத்து, திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
இது குறித்து அறிந்த கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா, கும்பகோணம் வட்டாட்சியர் வெங்டேஷ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தபோதும், போராட்டக்காரர்கள் தங்களது முடிவை மாற்றிக் கொள்ளாமல், வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்தனர். பொதுமக்களின் இந்த செயலைக் கண்ட கோட்டாட்சியர், வட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறினர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சன்னாபுரம் கிராம மக்களின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.