சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் ஏறத்தாழ 15 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், திமுக கட்சியின் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் சுமதி (எ) தமிழச்சி தங்கப்பாண்டியன் இன்று(ஏப்.3) தி.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தி.நகர், கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் , அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது தி.நகர்ப் பகுதியில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட போது திமுக நிர்வாகி ஒருவரின் குழந்தைக்கு அருகன் என பெயர் சூட்டினார். இந்த பெயர் புத்தரின் பெயர் எனவும் பெற்றோரிடம் கூறியதுடன், தமிழ்ப் பெயர் எனவும், இந்த பெயர் உங்களுக்குப் பிடித்திருந்தால் வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார்.
தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளருக்குப் பணத்தினால் செய்யப்பட்ட பூங்கொத்தைப் பரிசாக வழங்கினர். பிரச்சாரத்திற்குச் சென்ற இடங்களில் வேட்பாளருக்கு மாலை அணிவித்தும், மலர் கீரிடம் சூட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, பகுதி செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீவிர பிரச்சாரத்திற்கிடையே ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுகவுக்கு ஆதரவாகப் பெரிய அலை வீசுவதாகவும், களம் திமுகவிற்கு ஆரவாரமாகவும், எழுச்சியாகவும் உள்ளது.
தேர்தலுக்காகக் கச்சத்தீவைக் கையில் எடுத்த பாஜக: பாஜக மற்றும் பிரதமர் மோடி கச்சத்தீவைத் தேர்தலுக்காகக் கையில் எடுத்துள்ளனர். கடந்த 10 வருடமாக எதுவும் செய்யாமல் தற்போது தேர்தலுக்காக மேற்கொள்ளும் பல்வேறு யுக்திகளில் அதுவும் ஒன்றாக உள்ளது.
தமிழ்நாட்டிற்குப் பிரதமர் தேர்தலுக்காக அடிக்கடி வருகிறார் என மக்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டை வெள்ளம் பாதித்த பொழுது வராதவர் தற்பொழுது வருகிறார் என்பது 'உள்ளங்கை நெல்லிக்கனி' போல் தெளிவாகத் தெரிகிறது.
கோரிக்கைகளை நிறைவேற்றாத பாஜக: நாடாளுமன்றத்தில் நான் வலியுறுத்திய கோரிக்கையில் முக்கியமானது சுங்கச் சாவடிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்தினேன். அதனை இன்னும் செய்யவில்லை. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளை முடிக்க வேண்டும் என வலியுறுத்தினேன் அதையும் செய்யவில்லை.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினேன். அதையும் செய்யவில்லை. வேளச்சேரி பகுதியைச் சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டுமெனக் கூறினோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அதற்குரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர் பள்ளிக்கரணை குறித்து அதிகம் தெரிந்தவராக இருக்கட்டும். பள்ளிக்கரணை சதுப்புநிலத்திற்கு பல்வேறு திட்டங்களைத் தீட்டி அனுமதி வாங்கி உள்ளோம். தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையின் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நபார்ட் நிதியுதவியுடன் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
தேர்தலின் முக்கிய வாக்குறுதி: நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய வாக்குறுதியாகக் கிழக்கு கடற்கரைச் சாலை பெருங்குடியிலிருந்து (ஈசிஆர்) மகாபலிபுரம் வழியாகக் கடலூருக்கு ரயில் போக்குவரத்து கொண்டு செல்வதற்கான வாக்குறுதியைக் கொடுக்கவும், அதனை நிறைவேற்றவும் செய்வோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "திமுக ஆள், அதிகாரம், பண பலத்தை வைத்து வென்று கொண்டிருக்கிறது" - ஜி.கே. வாசன் விமர்சனம்! - Lok Sabha Election 2024